Published : 12 Dec 2024 09:57 AM
Last Updated : 12 Dec 2024 09:57 AM

20 முறை சினிமாவான ஒரே கதை! - பிரகலாதா

‘சதி லீலாவதி’ மூலம் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி’யில் ஹீரோ ஆவதற்கு முன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்த படங்களில் ஒன்று, ‘பிரகலாதா’. இது அவருக்கு 6-வது படம்.

அந்தக் காலகட்டங்களில் புராணக் கதையை மையப்படுத்தி படங்கள் உருவாக்குவது வழக்கமாக இருந்தது. அதனடிப்படையில் பிரகலாதனின் கதையை படமாக்கினார்கள். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்வதுதான் கதை.

‘காளிதாஸ்’ (1931) படத்தை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டி, 1932-ல் ‘பக்த பிரகலாதா’ என்ற படத்தைத் தெலுங்கில் இயக்கினார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. அதே கதையைத்தான் ‘பிரகலாதன்’ என்ற பெயரில் எடுத்தார்கள். படத்தில் ‘பிரஹ்லாதா’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். இதே கதை பல்வேறு மொழிகளில் 20 முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கதை, 20 முறை சினிமாவானது இந்தியாவில் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

இதில் பிரகலாதனாக டி.ஆர்.மகாலிங்கமும், இந்திரனாக எம்ஜிஆரும் நடித்தனர். குணச்சித்திர நடிகர் ஆர்.பாலசுப்ரமணியம் இரணியனாகவும் பிரகலாதனின் தாயாக எம்.ஆர்.சந்தானலட்சுமியும் நடித்தனர். நாரதராக நாகர்கோவில் கே. மகாதேவன் நடித்தார். இவர் நாடகங்களிலும் சில படங்களிலும் தொடர்ந்து நாரதராகவே நடித்து வந்ததால் சினிமா வட்டாரத்தில் இவரை ‘நாரதர்’ மகாதேவன் என்றே அப்போது அழைப்பார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.எஸ்.துரைராஜ் என பலர் நடித்தனர். பி.என்.ராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு சர்மா பிரதர்ஸ் இசை அமைத்தனர். பாடல்களை பாபநாசம் சிவன் எழுதினார்.

இரணியனின் மகன் பிரகலாதன், தந்தையின் விருப்பத்துக்கு மாறாக விஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருக்கிறான். மகனின் மனதை மாற்ற இரணியன் முயற்சிக்கிறான். அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. ‘விஷ்ணு தூணிலும், இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என மகன் சொல்லும்போது, தனது கதையால் இரணியன் தூணைத் தாக்க, அதைப் பிளந்து கொண்டு நரசிம்ம அவதாரம் எடுத்து வரும் விஷ்ணு, தனது நகங்களால் இரணியனின் வயிற்றைப் பிளந்து கொல்வது கதை.

தியாகராஜ பாகவதர் நடித்து 1937-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘சிந்தாமணி’ படத்தைத் தயாரித்த சேலம் சங்கர் பிலிம்ஸ், கோவையைச் சேர்ந்த சென்ட்ரல் ஸ்டூடியோவுடன் இணைந்து, இதைத் தயாரித்தது. 1939-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் சராசரி வெற்றியை பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x