Published : 08 Dec 2024 12:15 PM
Last Updated : 08 Dec 2024 12:15 PM
தமிழ் சினிமாவின் கதைக்களங்களில் புதுமைமிகு மாற்றங்களை விதைத்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்த நாளையொட்டி அவரது இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் காதல் காட்சிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சூழ்ந்திருக்கும் கும்மிருட்டில் மெழுகுவர்த்திக்கு அப்படியே நேர்கோட்டில் அமர்ந்திருப்பார் ஜரீனா (ஹீமா குரேஷி). இருளைக் கவ்வியிருக்கும் வெற்றிடத்தில் நேர்கோட்டில் பரவும் அந்த மஞ்சள் ஒளி ஜரீனாவின் மஞ்சள் நிற சுடிதாரில் பட்டு எதிரொலிக்கும் கணத்தில், குடும்பத்திலிருப்பவர்களை பயமுறுத்தும் பொருட்டு உள்ளே நுழையும் கரிகாலன் (ரஜினி) பயந்து நிற்பார். உண்மையில் பழைய காதலின் மீட்டல் என்பது நம்மை பயமுறுத்தக்கூடியது தானே!
தோற்றுப்போன காதலர்கள் எதிர்கொள்ளும்போது, பிரவாகமெடுத்து பொங்கும் காதலை பின்னணியிலிருந்து தன் மென்குரலால் வருடிக்கொடுத்து அந்தக்காட்சிக்கு அடர்த்தி கூட்டியிருப்பார் பாடகர் பிரதீப். அந்த இருட்டில் ஒளிரும் ஒற்றை மெழுகுவர்த்தியின் ஒளியில் தெரியும் ஜரீனாவின் முகமும், அவரின் அந்த மஞ்சள் சுடிதாரில் பட்டு எதிரொலிக்கும் ஒளி கரிகாலனின் அதிர்ச்சியுறைந்த முகத்திற்கு கொடுக்கும் நினைவின் மீட்டலும், இருவருக்கும் மாறி மாறி வைக்கப்படும் க்ளோசப் ஷாட்டும், ‘கண்ணம்மா...’ ஹம்மிங்கும்...ஒட்டுமொத்த அந்த சில நிமிட காட்சிகளிலும் அழகூட்டி ரசிக்க வைத்திருப்பார் பா.ரஞ்சித்.
பெருமழைக்குப் பின்பும் நிற்காத தூரலைப்போல, தானிழந்த காதலை கண்ட அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்திருக்கும் கரிகாலன், பேச திணறிக்கொண்டிருப்பார். சூழலை உள்வாங்கும் செல்வி (ஈஸ்வரி ராவ்) உடனே சுதாரித்து ‘என்ன சாப்டீறீங்க காஃபியா டீயா?’ என கேட்க முந்திக்கொண்டு ‘காஃபி’ என கூறுவார் கரிகாலன். செல்வியிடம் ஒரு நம்பிக்கை கலந்த பயமிருக்கும். அது செல்விகளுக்கே உரித்தானது.
அது தன் கணவன் மீதான பயமும், இழந்த காதல் மீதான நம்பிக்கையும். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு கரிகாலன் - ஜரீனாவைத் தாண்டி அங்கே மதிக்கப்படுபவர் செல்வி. காரணம் பிரிந்த காதலர்களுக்குத் தேவையான ஸ்பேஸைக் கொடுத்து அவர்கள் உரையாட நேரமமைத்து கொடுத்து, அவர்களின் காதலை மதிக்கும் செல்வியின் அந்த முழு துணிச்சலுக்கும் காரணம் கரிகாலன் மீதான நம்பிக்கை தான்.
அடர் மௌனம் சூழந்திருக்கும் அந்த கணத்தில் கரிகாலனும் - ஜெரீனாவும் பேச வார்த்தைகளற்று தவிக்கும்போது, அங்கே மீண்டும் ‘நா..னா.னனா...’ என பிரதீப்பின் குரல்; இன்னும் ரசிக்க வைத்திருக்கும். இருவருக்குமான உரையாடல் பெரிய அளவிலெல்லாம் இருக்காது. அந்த காட்சிக்கு ஏற்ற மீட்டரில் பதிந்திருப்பார் ரஞ்சித். அங்கே வசனங்களை குறைத்து பிரதீப்பிடம் அந்தக்காட்சியை ஒப்படைத்திருப்பார்.
இருவரும் மாறி மாறி தங்களது காதல் கதையை சொல்லும் காட்சியின் விஷூவல் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை ஒட்டி எழும் ‘கண்ணம்மா’ பாடலில் ‘ஊட்டாத தாயின் கணக்கின்ற மார்ப்போல் என் காதல் கிடக்கின்றதே’ என தேங்கியிருக்கும் காதலின் வலியை தன் அட்டாகாசமான வரிகளில் எழுதி எவர்கிரீன் ஆக்கியிருப்பார் பாடலாசியர் உமா தேவி.
முன்னாள் காதலர்களுக்கான ஸ்பேஸை செல்வி கொடுக்க காரணமான நம்பிக்கையை அவர் பிரதிபலிக்கும் இடம் முக்கியமானது. லெனின் (மணிகண்டன்) ‘அப்போ அப்பாவுக்கு உன் மேல லவ் இல்லையா?’ என கேட்கும்போது, ‘போடா போய் காலா கிட்ட கேளு. இந்த செல்வி இல்லன்னா உன் அப்பன் இல்ல’ என தன் இருப்பை தன்னிலை சார்ந்து பதியவைப்பார். கரிகாலன் - ஜரீனா - செல்வி மூன்றுபேரை சமநிலைப்படுத்தி மொத்த காதலையும் படத்தில் ரஞ்சித் கடத்தியிருக்கும் விதம் அழுத்தம் கூட்டும்.
அடுத்து வரும் ரெஸ்டாரன்ட் காட்சியில் இருவரும் சந்தித்து தங்கள் காதலின் நினைவுகளை மீட்டும்போது, கரிகாலன், ‘என்ன நம்புற செல்விக்கு, சின்னதா கூட அவநம்பிக்கை வரக்கூடாது. நான் தான் அவளுக்கு உலகமே, நான் மட்டும் தான். இப்போ கூட நான் உன்ன பாக்க தான் வரேன்னு அவளுக்கு தெரியும். ஆனா ஒரு வார்த்த கேக்கல’ என கூறுவார். உண்மையில் இந்த பேலன்சிங்கும், புரிதலும் ரஞ்சித்திடம் நிறையவே இருக்கிறது. அதையொட்டியே முந்தைய காட்சியில் கரிகாலன் மீது நம்பிக்கை வைத்து காதலர்களுக்கு செல்வி ஸ்பேஸ் கொடுத்திருப்பார்.
அந்த புரிதலின் வழியே தன்னை நம்பும் செல்விக்கு எந்த பாதகமும் வருத்தமும் ஏற்பட்டுவிடக்கூடாது என கரிகாலன் தெளிவாக இருப்பார். காதலிலும், திருமணத்திலும், ஓர் உறவை நிலைப்பெறச்செய்வது இந்த நம்பிக்கை தானே! ‘என்னால சின்னதா உங்க உறவுல கீறல் கூட விழாது’ என ஜரீனாவின் அந்தப்புரிதலும் பளிச்சிடும். ‘உன் நினைவுகள்ல இருக்குற ஜரீனாவா மட்டும் நான் இருந்தா போதும்’ அவ்வளவுதானே.. உடைந்துபோன காதல்கள் நினைவுகளில் மட்டுமே ஒட்டும். யதார்த்தத்தில் யாரையும் பாதிக்காது.
அடுத்த காட்சியில் செல்வியை சந்திக்கும் கரிகாலன், ‘என் கண்ணு மொத்தமும் நீ தான்டி நிறைஞ்சியிருந்த. என்னால அவள பாக்க கூட முடியல’ என சொல்லும் போது அழுதுகொண்டிருக்காமல், எழுந்து அவருக்கு எதிராய் பெருமாள் தன்னை காதலித்த கதையை முன்வைப்பார் செல்வி. அப்போது கரிகாலன் பதரும்போது, இரண்டு சைடிலுமான மன ஓட்டத்தை காட்டியிருப்பார் ரஞ்சித். இதுவே பெண் ஒருவர் இந்த மாதிரியான முடிவெடித்திருந்தால்... என நீளும் அந்த காட்சி இரண்டு பக்க நியாயத்தையும் சேர்த்திருக்கும். கூடவே ‘ஆமா நிஜமா நீ அந்த பெருமாள லவ் பண்ண?’ என ரஜினி கேட்பது ஒட்டுமொத்த ஆண்களுக்கான ஒரு குறியீடாக காட்டப்பட்டிருக்கும். ஜரீனாவை காதலிக்கும்போது செல்வி பொறுத்துக் கொண்டும்.. பெருமாளை காதலித்தால் மட்டும் கரிகாலனால் ஏற்க முடியாதது யதார்த்தமாக்கப்பட்டிருக்கும்.
இந்த மூன்று பேரையும் பேலன்ஸ் செய்து காதலை இழையோட வைத்து ‘காலா’ படத்தின் காட்சிகளை மெருகேற்றியிருப்பார் ரஞ்சித். கூடவே புயல் - லெனின் காதலும் கூட திரைக்கதையில் சைலண்டாக பயணிக்கும். காதல் காட்சிகளை தனது படங்களில் கவனத்துடனும் சமநிலையுடனும் கையாளும் ரஞ்சித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT