Published : 08 Dec 2024 10:11 AM
Last Updated : 08 Dec 2024 10:11 AM

1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி: புகைப்பிடித்ததால் நடிகரை மாற்றிய தயாரிப்பாளர்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து பெரும் வெற்றி பெற்ற படங்களின் ஒன்று ‘1000 தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’. டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். நாட்டுப்புறக் கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தைப் பாரதிதாசன் எழுதினார். ஆனால், டைட்டிலில் தனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் கூறிவிட்டதாகச் சொல்வார்கள்.

அபூர்வ சிந்தாமணியாக, எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்திருந்தார். அவரின் தந்தையாக எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி நடித்தார். பி.எஸ்.கோவிந்தன், மாதுரி தேவி, காளி.என். ரத்தினம், எஸ்.வரலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், எம்.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பாலசுப்பிர மணியம், டி.எஸ்.துரைராஜ், கே.கே.பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தொடக்கக் காட்சியிலேயே துறவி ஒருவர் பூதகணத்திடம், “என் ஆசை எல்லாம் நிறைவேற வேண்டும். நான் எண்ணியதை முடிக்கும் வல்லமை வேண்டும்” என்று வரம் கேட்கிறார். “நீ ஆயிரம் தலைகளைக் கொண்டு வந்து யாகம் செய்தால் கிடைக்கும்” என்கிறது பூதகணம். ‘அத்தனை தலைகளுக்கு எங்கு போவேன்?” என்கிறார் துறவி. “ஆதித்தபுரி மன்னன் மகள் அபூர்வ சிந்தாமணியை அணுகு. அவள் அழகில் மயங்கிவிடாமல் பயன்படுத்திக் கொள். அவள் அழகுக்கு ஆயிரம் பேர் என்ன, இந்த அகிலமே பலியாகும்” என்கிறது பூதம்.

அதன்படி துறவி, அந்த அரண்மனைக்குச் செல்கிறார். அவரைப் பார்த்ததும், இதுதான் தனது குரு என முடிவு செய்கிறாள் அபூர்வ சிந்தாமணி. சிந்தாமணியின் தாய்மாமன், அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்கிறான். அவள், துறவியிடம் கேட்கிறாள். அவர், “நான் உனக்கு 3 கேள்விகளைச் சொல்வேன், உன்னை மணக்க வருபவர்களிடம் அதற்குப் பதில் கேள். சரியாகச் சொன்னால், திருமணம் செய்துகொள். தவறாகப் பதில் சொன்னால், அவன் தலையைக் கொய்துவிடு” என்கிறார்.

தாய்மாமன் வருகிறான். பதில் தெரியாததால் அவன் தலை கொய்யப் படுகிறது. அக்கம் பக்கத்து நாடுகளில் இருந்தும் அவள் அழகை அறிந்த வர்கள் வருகிறார்கள். பதில் தெரியாததால் தலைகள் கொய்யப்படுகின்றன. இப்படி 999 தலைகளை வெட்டி வீசிவிடுகிறார் அபூர்வ சிந்தாமணி.

தன் சகோதரர்கள் ஆறுபேர் அபூர்வ சிந்தாமணியால் கொல்லப்பட்டதை அறியும் பக்கத்து நாட்டு இளவரசன் மெய்யழகன், மாறுவேடத்தில் அவர் நாட்டுக்கு வருகிறான். சிந்தாமணியின் தோழி செங்கமலத்தைக் காதலிக்கிறான். அவள் மூலமாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அவன், இதற்கெல்லாம் அந்த துறவிதான் காரணம் என்பதை அறிந்து என்ன செய்கிறான் என்று கதை செல்லும்.

இதில் எஸ்.வரலட்சுமியும் (செங்கமலம்) பாடகர் மற்றும் நடிகர் பி.எஸ்.கோவிந்தனும் (மெய்யழகன்) காதல் ஜோடியாக நடித்தனர். சி.டி.ராஜகாந்தம், காளி என்.ரத்தினம் ஜோடியின் நகைச்சுவைப் பேசப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரத்தை அடுத்து பிரபலமான நகைச்சுவை ஜோடியாக இவர்கள் இருந்தனர்.

ஜி.ராமநாதன் இசை அமைத்தார். கர்நாடக சங்கீதத்தில் அமைந்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 20,050 அடி நீளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கிட்டதட்ட நான்கு மணிநேரம் ஓடியது. இருந்தாலும் 1947-ம் ஆண்டு, இதே தேதியில் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்தப்படத்தை 13 வருடங்களுக்குப் பிறகு 1960-ம் ஆண்டில், ‘சஹஸ்ர சிரச்சேத சிந்தாமணி’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார், டி.ஆர்.சுந்தரம். எஸ்டி.லால் என்ற பெயரில் சையத்லால் இயக்கினார். தேவிகா, அபூர்வ சிந்தாமணியாக நடித்தார். இளவரசனாக முதலில் நடித்தது அந்த காலகட்டத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த ஜக்கையா. படப்பிடிப்பு தளத்தில் புகைப்பிடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம். ஜக்கையா கேட்கவில்லை. தொடர்ந்து புகைப்படித்துக் கொண்டிருந்தார். அதனால் உடனடியாக அவரை நீக்கிவிட்டு அந்த கதாபாத்திரத்துக்கு காந்தா ராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படம் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x