Published : 04 Dec 2024 08:16 AM
Last Updated : 04 Dec 2024 08:16 AM
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ படத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் புதிதாக வெளியாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்கக்கோரி, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘சமீபகாலமாக புதிதாக வெளியாகும் திரைப்படங்களை யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. இந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்க செல்லும் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, பல படங்களை தோல்வியடைய செய்கின்றன. இதனால் பல கோடிகளை செலவிட்டு பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே புதிய படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்கள் பற்றி முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். அதேபோல விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூ-டியூப், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ். சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் திரைப் படங்களை விமர்சனம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்துக்களைத் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர். இதனால் முதல் 3 நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸில் புகார் அளி்க்கலாம். அதே நேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சில படங்களுக்கு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் வருகின்றன. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூ-டியூப் நிறுவனமும் 4 வார காலங்களி்ல் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT