Published : 29 Nov 2024 02:51 PM
Last Updated : 29 Nov 2024 02:51 PM
நரகத்தில் இருப்பவனுக்கு சொர்க்கத்துக்கு போக சாவி கிடைத்தால், அந்த சாவியை அவன் எப்படி பயன்படுத்துகிறான் என்பது ‘சொர்க்கவாசல்’ படத்தின் ஒன்லைன்.
1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் கலவரம் வெடித்து பல உயிர்கள் பலியாகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் (நட்டி நடராஜன்) தலைமையிலான ஆணையத்தை அமைக்கிறது அரசு. அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் கதை சொல்லப்படுகிறது. அதன்படி மத்திய சிறையில் இருக்கும் ரவுடியான சிகா (செல்வராகவன்) திருந்தி வாழ ஆசைப்படுகிறார். ஆனால், புதிதாக வரும் காவல் அதிகாரி, சிகாவை ஒன்றுமில்லாமல் முடக்க நினைக்கிறார்.
இந்தச் சூழலில், செய்யாத குற்றத்துக்காக உள்ளே வருகிறார் பார்த்திபன் (ஆர்.ஜே.பாலாஜி). சிறையின் கொடுமை அவரை துரத்துகிறது. இதற்கான முற்றுப்புள்ளி கிடைக்கும் ஒரு நாளில் பெரும் சம்பவம் ஒன்று சிறையில் நிகழ்ந்து, அதையொட்டி கலவரம் வெடிக்கிறது. இதில் எதற்கும் தொடர்பில்லாத பார்த்திபன் கூண்டில் மாட்டிய கிளியாக சிக்கித் தவிக்கிறார். இறுதியில் அவர் அதிலிருந்து வெளியேறினாரா, இல்லையா என்பதை திரைக்கதை.
இருளும், கருணையற்ற முகங்களும், அதில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தென்படும் அன்பு நிரம்பிய உள்ளங்களையும் உள்ளடக்கிய சிறை வாழ்க்கையை செல்லுலாய்டில் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த். 1999-ல் சென்னை மத்திய சிறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவிய கதையாக கூறப்படுகிறது. மும்மதங்களையும் சேர்ந்தவர்கள், திருநங்கை, இலங்கைத் தமிழர், வெளிநாட்டவர் என அனைத்து தரப்பினரும் குழுமியிருக்கும் சிறையின் சுவரில் புத்தருக்கும், அம்பேத்கருக்கும், பைபிளுக்கும் இடமுண்டு.
கதாபாத்திரங்களில் காட்டிய வெரைட்டி, சிறையில் நடக்கும் சண்டைக் காட்சிகள், திருநங்கைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இருக்கும் பாலியல் அச்சுறுத்தல்கள், தனிமைச் சிறையின் கொடுமை, அதிகார துஷ்பிரயோகங்களாக சிறை முள் கம்பிகளுக்கிடையே, அன்பை போதிக்கும் சில கதாபாத்திரங்களும், நேர்மையும், எமோஷனல்களும் பூக்களாக பூக்கின்றன. ஒரு முழுமையான திரையனுபவ பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு சம்பவத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளை, அதில் தொடர்புடையவர்களின் வாக்குமூலங்களுடனும், நேரடி சாட்சியங்களுடனும், சஸ்பென்ஸை ஒளித்து வைத்தது நான்-லீனியர் முறையில் கொண்டு சென்ற விதம் சுவாரஸ்யம். அதிலும் பரபரவென கடக்கும் இரண்டாம் பாதி பலம்.
“கடவுளாக இருப்பது எளிது, மனிதராக இருப்பது கடினம்”, “வாழ்க்கையில இரண்டே வழிதான். ஒண்ணு சொர்க்கத்துல மண்டியிடலாம், இல்லன்னா நரகத்துல ராஜாவா இருக்கலாம்”, “வன்முறைதான் உலகின் மிகப் பெரிய கோழைத்தனம்”, “சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்” போன்ற வசனங்கள் சிறப்பு. ஐஏஎஸ் அதிகாரியை கொன்றது யார் என்பதில் தெளிவில்லை. பலவீனமான ஆதாரங்களை வைத்து ஆர்.ஜே.பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை. இறுதிப் பகுதியை இழுத்தது போன்ற உணர்வும் எழுகிறது.
கிட்டத்தட்ட ‘புதுப்பேட்டை’ தனுஷ் போன்றதொரு கதாபாத்திரம் ஆர்.ஜே.பாலாஜிக்கு. “வலிக்குதுடா, வலிக்குதே” என பீறிட்டு அழுவது, பயந்த சுபாவத்துடன் தொடங்கி, போகப் போக உடல்மொழியில் மாற்றங்களை தகவமைத்துக் கொள்வது என நடிப்பில் அவருக்கு இது அடுத்தகட்டம். ஆனாலும், தொடக்கத்தில் சிறைக்கு வெளியே இருக்கும் காட்சிகளில் முகபாவனைகளில் அழுத்தம் தென்படவில்லை. கெத்தான சிகா என்ற ரவுடி கதாபாத்திரத்துக்கு செல்வராகவன் தேர்வு சொதப்பல். அவர் முழு நடிப்பையும் கொடுத்தாலும், பொருத்தமின்மை அப்பட்டமாக வெளிப்படுவதால், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கதாபாத்திரம் தடுமாறுகிறது.
அதிகாரத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தில் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார் கருணாஸ். சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், நட்டி, பாலாஜி சக்திவேல் கவனிக்க வைக்கின்றனர். ஹக்கிம்ஷா ‘பீஸ்ட்’ மோடில் உறுமுகிறார். சானியா அய்யப்பனும், தாய் கதாபாத்திரமும் அழுகைக்காக மட்டுமே. காவல் துறை அதிகாரியான வரும் ஷெராஃபுதீன், இலங்கைத் தமிழர் கதாபாத்திரம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
கிறிஸ்டோ சேவியர் இசை பரபரப்பையும், பிரின்ஸ் ஆன்டர்சனின் ஒளிப்பதிவு சிறைக்குள்ளிருக்கும் உணர்வையும் தருகின்றன. செல்வா ஆர்.கேவின் நேர்த்தியான கட்ஸ் கோர்வையான திரைமொழிக்கு பெரிதும் உதவுகின்றன. கலை ஆக்கம் படத்தின் ஆன்மாவாக மிரட்டுகிறது. திரைக்கதையின் அடர்த்தியின் தேவைக்கேற்ப வன்முறையும், ரத்தமும் தெறிக்கிறது. ஒட்டும்மொத்தமாக, எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையூட்டும் எங்கேஜிங்கான படைப்பாக கவனிக்க வைக்கிறது ‘சொர்க்கவாசல்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment