Last Updated : 26 Nov, 2024 05:06 PM

1  

Published : 26 Nov 2024 05:06 PM
Last Updated : 26 Nov 2024 05:06 PM

“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் இன்று (நவ.26) சந்தித்துப் பேசினார். அப்போது அவர் புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால் தான் இயக்கத் தயார் எனவும் முதல்வரிடம் கூறினார். அதன் பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தற்போது தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன்.

புதுவையில் சுற்றுலா வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், திரைப்படம், தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. கரோனா காலத்தால் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.28 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், சீரியலுக்கு ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும் குறைத்துள்ளனர். தமிழக அரசும் அதை செயல்படுத்தவேண்டும். நல்ல திரைப்படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடைய வைப்பது சரியல்ல. நடிகர் தனுஷ், நயன்தாரா மோதலை பார்வையாளனாகவே பார்த்து ரசிக்கிறேன். நான் பார்வையாளர்தான். அவரவர் தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு முன்பை விட பாதுகாப்பு உள்ளது.

தமிழ்,மலையாள நடிகைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமிழ் திரைப்பட கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரியது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தவிர ஏதும் தெரியாது. நல்ல மனிதர் என அவர் மனைவி தந்த சான்றிதழை தவிர யாரும் தரமுடியாது. குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும். அதை பெரிது படுத்தியிருக்கக்கூடாது. தமிழகத்தில் பேச்சு மூலமே அரசியலில் வென்று வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் பேச்சு வரவேற்கத்தக்கதாக உள்ளது. வெளிநாடுகளில் அரசியல் பேச்சு என்பது குறைவுதான்.

ஆனால், தமிழகத்தில் அரசியலில் சுவாராஸ்யமான பேச்சின் மூலமே பதவிக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய், நடிகர் சீமான் ஆகியோர் பேச்சு வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவை. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். ஆளும்கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். அரசியலில் ஆர்வமுண்டு. யாரையும் சார்ந்து இருக்கமாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசையிருப்பதால், எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x