Published : 23 Nov 2024 06:44 PM
Last Updated : 23 Nov 2024 06:44 PM

அவதூறு, பொய் செய்திகளை நீக்காதோர் மீது வழக்கு தொடரப்படும்: ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து அறிவைப்பை ஒட்டிய அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும், வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் உடனடியாக நீக்காவிட்டால் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் நர்மதா சம்பத் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அந்த நோட்டீஸின் விவரம்: “ஏ.ஆர்.ரஹ்மான் சில நாட்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த அறவிப்பை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். இந்த தகவலை முன்னணி நாளிதழ்கள் உட்பட பலரும் செய்தியாக வெளியிட்டனர். ஆனால், சில சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், பல யூடியூபர்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதூறு கருத்துகளை, தங்களின் சொந்தக் கற்பனைக்கு உட்படுத்தி, பல கதைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், குடும்பத்தாரை புண்படுத்தும் வகையிலும், வெளியிடப்படும் பதிவுகளில் துளி அளவும் உண்மையில்லை. இது ஒரு மலிவான செயல்.

அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து குறித்த அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்கள், யூடியூப்பிலிருந்து அகற்றுமாறு எச்சரிக்கப்படுகிறது. அப்படி அகற்றாதவர்கள் மீது பாரதிய நியாயா சன்ஹிதா 356-வது பிரிவின் கீழ் அவதூறு வழக்கு தொடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். குறிப்பாக யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக இந்த நோட்டீஸ் அனுப்பபடுகிறது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x