Last Updated : 23 Jun, 2018 03:02 PM

 

Published : 23 Jun 2018 03:02 PM
Last Updated : 23 Jun 2018 03:02 PM

முதல் பார்வை: டிராஃபிக் ராமசாமி

பேனர்களைக் கிழிப்பவர், பொதுநல வழக்கு போடுபவர் என்று செயல்படும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கோமாளியா, ஏமாளியா, போராளியா? அவர் யார்? என்பதைச் சொல்வதே 'டிராஃபிக் ராமசாமி' படம்.

அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகளைத் தட்டிக் கேட்கிறார் டிராஃபிக் ராமசாமி. இதனால் பலரின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் டிரைவருக்குத் தரும் பாலியல் துன்புறுத்தலைப் படம் பிடித்து வழக்கு போடுகிறார். இதனால் கோபமடையும் அந்த இன்ஸ்பெக்டர் ஒரு பொய் வழக்கில் கைது செய்து 3 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து அடித்துத் துன்புறுத்துகிறார். மீன்பாடி வண்டி இடித்ததால் உயிரிழந்த இளைஞனுக்காக ஒரு பொதுநல வழக்கு போட, அது எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர் வரை சகல அதிகாரத்தையும் அசைத்துப் பார்க்கிறது. இதனால் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கும், உறவுகளுக்கும் ஆபத்து நேர்கிறது. இறுதியில் டிராஃபிக் ராமசாமிக்கு என்ன ஆகிறது, அவர் இழந்தது என்ன, தன் குடும்பத்துக்காக அந்த வழக்கை வாபஸ் பெற்றாரா என்ற கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது திரைக்கதை.

டிராஃபிக் ராமசாமியின் கதையைப் படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்கி. அவர் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுக்காமல், சில சம்பவங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் தாக்கத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். அது எந்தவித அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் டிராஃபிக் ராமசாமி குறித்த அடையாளத்தையும் முழுமையாகக் கட்டமைக்காமல் வெறுமனே கடந்து செல்கிறது.

டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் கதைக்குப் பொருந்திப் போகும் அவர் சில காட்சிகளில் மட்டும் மிகையான பாவனைகளால் அயர்ச்சியை ஏற்படுத்துகிறார்.

ரோகிணிக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. அழுவதும், வருத்தப்படுவதும், நாடகத்தனத்துடன் சிரிப்பதுமாகவே வந்து போகிறார். சேத்தன், அம்மு ராமச்சந்திரன், அம்பிகா, லிவிங்ஸ்டன், மோகன்ராம், வினோத், இமான் அண்ணாச்சி ஆகியோர் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

ஆர்.கே.சுரேஷ் மீது ஓர் ஒட்டுதல் ஏற்படும் அளவுக்கு நல்ல கதாபாத்திரம். அதை இயல்பாகச் செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் இரு காட்சிகளில் வந்தாலும் மனிதர் பின்னுகிறார். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, 'பசி' சத்யா, குஷ்பு, சீமான், எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப் ஆகியோர் கவுரவத் தோற்றத்தில் நடித்து படத்திற்கு மரியாதை சேர்த்திருக்கிறார்கள்.

குகன் ஜி.பழனியின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். பாலமுரளி பாலுவின் பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. நூறு கரங்கள் அடிக்கலாம், ஆயிரம் கால்கள் மிதிக்கலாம், லட்சம் படைகள் எதிர்க்கலாம் என்ற வசனத்துடன் இணைந்து வரும் சோர்ந்திடாதே என்ற போராளி ஆன் தம் பாடல் ரசிக்க வைக்கிறது. சாராய மண்டைய பாடலில் கறாராக இருந்து எடிட்டர் பிரபாகர் கத்தரி போட்டிருக்கலாம்.

ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர் டிராஃபிக் ராமசாமி. அவர் தொடர்ந்த பல வழக்குகள் எதிர்தரப்பினரைக் கோபப்படுத்த, அதனால் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் அதிக எடையை ஏற்றிக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் கணக்கின்றி ஓடிய மீன்பாடி வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்றவர் டிராஃபிக் ராமசாமி. இந்த நிஜ சம்பவங்களைப் படத்தில் பயன்படுத்தி அப்படியே இருப்பது சிறப்பு. ஆனால், அவை காட்சி ரீதியாக எந்த மாற்றத்தையும், பாதிப்பையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தவே இல்லை.

அவரின் குடும்பப் பின்னணியை சித்தரித்த விதம் அந்நியமாகவே இருக்கிறது. கதையுடன் ஒன்றாமல் செயற்கையாகத் துருத்தி நிற்கிறது. படத்தில் விவரணைகள், ஜோடனைகள் சரியாக சொல்லப்படாததால் வலிமிகுந்த துயரம் படிந்த காட்சிகளும் எடுபடவில்லை. நீதிமன்றக் காட்சிகளில் நீதிபதி நடந்துகொள்ளும் விதம், வழக்கறிஞர்களின் விவாதங்கள் ஆகியவை சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகின்றன. அதிலும் நீதிபதி அம்பிகாவின் செயல்கள் நீதித்துறை மீதான மதிப்பைக் குலைக்கும் வகையில் உள்ளன. நீதிமன்றத்தில் நடக்கும் எள்ளல் தன்மையும், பரிகாசமும் டிராஃபிக் ராமசாமி மீதான பரிதாபத்தை, அவர் ஏமாளி என்ற பிம்பத்தைப் பதிவு செய்யாமல் ஏன் இப்படி திரைக்கதை திசை மாறிச் செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

நல்ல கதைக்கருவை எடுத்துக்கொண்ட இயக்குநர், வலுவான காட்சிகளைக் கொண்டு திரைக்கதை அமைக்காமல், நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட சில அம்சங்கள் படத்தின் தீவிரத் தன்மையைக் குறைக்கின்றன.

இவற்றை எல்லாம் தாண்டி சம கால அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்களைப் பகடி செய்த விதத்துக்காகவும், எந்த நிலையிலும் அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற தீரத்தை உறுதியுடன் சொன்னதற்காகவும் ‘டிராஃபிக் ராமசாமி’யை ஒருமுறை சந்திக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x