Published : 22 Oct 2024 06:44 AM
Last Updated : 22 Oct 2024 06:44 AM

மாய மாயவன்: தமிழ் சினிமாவின் முதல் ஆக்‌ஷன் படம்!

மு தல் இரட்டை வேட படம், மலையாள சினிமாவின் முதல் பேசும்படம் (பாலன்), தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம் (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்), ஜேம்ஸ் பாண்ட் வகைப் படங்கள் என பல ‘முதல்’களை அறிமுகப்படுத்திய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தமிழின் உயர் தரமான ஸ்டன்ட் படத்தையும் தந்திருக்கிறது. அந்த படம், ‘மாயா மாயவன்’. அதனால்தான் ‘உன்னத தமிழ் ஸ்டன்ட் படம்!’ என்று இந்தப் படத்தை விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இதில், டி.கே.சம்பங்கி என்ற நாடக நடிகர் ஹீரோவாக நடித்தார். இவர், தான் சொந்தமாக வைத்திருந்த நாடகக் குழு மூலம் தென்னிந்தியா முழுவதும் நாடகங்கள் நடத்தி வந்தவர். சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சினிமாவில் முன்னணி இடத்துக்கு வர முடியவில்லை. கதாநாயகியாக நடித்த சுசீலா தேவி, சிறந்த நடனக் கலைஞர். எல்லீஸ் ஆர்.டங்கனின் ‘சதீ லீலாவதி’ உட்பட பல படங்களில் ஆடியுள்ளார்.

இவர்கள் தவிர, கே.கோகிலா, சீதா பாய், வேணுகோபால சர்மா, ஜி.ஆர்.வரதாச்சாரி, கே.காவேரி செட்டியார், வி.வி.எஸ். மணி, வேணு செட்டி, தேவராஜு ஆகியோர் நடித்தனர். இதில் வேணுகோபால சர்மா, கிட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது உயர் நீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர் இவர். சினிமா ஆர்வத்தால் இதில் நடித்தார்.

பி.சம்பத் குமார் இயக்கினார். தியாகராஜ பாகவதர் நடித்து வெற்றிபெற்ற சத்யசீலன் (1936) உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார் இவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எஸ்.வேலுச்சாமி கவி, இதன் கதையையும் பாடல்களையும் எழுதினார்.

நடன மங்கையான மனைவி சுந்தரி (சுசீலா தேவி) இருக்கும்போது இன்னொரு இளம் பெண்ணான இந்திராவை (கே.கோகிலா) சொந்தமாக்க நினைக்கிறார், சபாபதி (வரதாச்சாரி). துப்பறியும் அதிகாரியான ஜெகதீஷ் (சம்பங்கி), இந்திராவைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். பின்னர் இருவரும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு வழக்கம் போல, சபாபதி மற்றும் அவர் ஆட்களால் பல தடைகள் வருகின்றன. தனது துப்பறியும் திறமையை பயன்படுத்தி காதல் ஜோடி எப்படி இணைகிறது என்பது கதை. எளிதில் யூகிக்கக் கூடிய கதைதான் என்றாலும் ஹாலிவுட் தாக்கத்தில், ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேஸிங், கடத்தல் என பரபரப்பாகப் படத்தை உருவாக்கி இருந்தனர். அந்த காலகட்ட ரசிகர்களுக்கு அது புதுமையாகவும் வியப்பாகவும் இருந்தது.

1938-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தை, தமிழ் சினிமாவின் முதல் முழு சண்டை படம் என்றும் சொல்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x