Published : 06 Oct 2024 11:29 AM
Last Updated : 06 Oct 2024 11:29 AM
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதை ‘இளையராஜா’ என்ற பெயரில் சினிமாவாகிறது. நடிகர் தனுஷ், இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை, தான் எழுதுவதாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் 3 மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அவர் கடந்து வந்த பாதை, வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா. அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT