Last Updated : 04 Oct, 2024 09:43 PM

 

Published : 04 Oct 2024 09:43 PM
Last Updated : 04 Oct 2024 09:43 PM

“தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் மிகவும் குறைவு” - இயக்குநர் கமலக்கண்ணன் பகிர்வு

இயக்குநர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: “குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இந்திய அளவில் குறைவாக உள்ளன. குறிப்பாக தமிழில் மிகவும் குறைவாக இருக்கிறது” என்று புதுச்சேரியில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட ‘குரங்கு பெடல்’ படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்துவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுச்சேரியில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2023 இன்று (செப்.4) மாலை தொடங்கியது. அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன், அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம், நவதர்ஷன் திரைப்படக்கழகம் செயலர் பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘குரங்கு பெடல்’ படத்தின் இயக்குநர் கமலக்கண்ணணுக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அரசு செயலர் கேசவன், எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான ராசி அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் பேசியதாவது: “குழந்தைகளுக்கான திரைப்படங்கள் இந்திய அளவில் குறைவாக உள்ளன. குறிப்பாக தமிழில் மிகவும் குறைவாக உள்ளன. நாம் குழந்தைகளுக்கு அவர்களுக்கான படங்களை காண்பிக்காமல், பெரியவர்களுக்காக எடுக்கின்ற படங்களை காண்பிக்கின்றோம். இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு இயக்குநராக, குழந்தைகளுக்கான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பும், நீண்ட நாள் ஆசையும் எனக்கு இருந்தது.

அப்போது ராசி அழகப்பன் எழுதிய சிறுகதையை படித்தபோது அது மிகுந்த உத்வேகத்தை கொடுத்தது. குழந்தைகள் உலகத்திலிருந்து தான் அனைவரும் பெரியவர்களாகிறோம். ஆகவே, அந்த உலகத்தை திரும்பிப் பார்ப்பது அவசியம். அதனடிப்படையில் கடந்த 1980-ம் ஆண்டுகளில் இருந்த சைக்கிள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவே ‘குரங்கு பெடல்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

இப்போது செல்போன் உலகத்தில் நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அடுத்த தலைமுறைக்கு காண்பிக்கும் முக்கியமான ஆவணமாகவும் இந்த படத்தை கொண்டு வந்துள்ளோம். அதனுடைய வெற்றிதான் தற்போது முதல்வரிடம் பெறும் விருது என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார். தொடர்ந்து ‘குரங்கு பெடல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து நாளை 5-ம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ (தெலுங்கு), 6-ம் தேதி ‘அரியிப்பு’ (மலையாளம்), 7-ம் தேதி ‘டோனிக்’ (வங்காளம்), 8-ம் தேதி ‘மேஜர்’ (இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x