Last Updated : 30 Sep, 2024 05:50 PM

 

Published : 30 Sep 2024 05:50 PM
Last Updated : 30 Sep 2024 05:50 PM

‘அக்கறை இருந்தால் பழநி கோயிலில் தூய்மைப் பணி செய்வீர்’ - மோகன் ஜிக்கு ஐகோர்ட் அறிவுரை

மோகன் ஜி | கோப்புப்படம்

மதுரை: “பழநி முருகன் மீது உண்மையில் அக்கறை இருந்தால் கோயில் குறித்து அவதூறு பரப்பாமல், பழநி கோயிலில் தூய்மை பணி மேற்கொள்ளலாம் அல்லது பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாள் பணியாற்றலாம்,” என திரைப்பட இயக்குநர் மோகன் ஜிக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அறிவுரை கூறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பழநி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மோகன் உயர் நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “இந்துக் கடவுள்கள் மீது நம்பிக்கை உள்ள நான், ஒரு முருக பக்தர். பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து எந்த விதமான அவதூறுகளையும் நான் பரப்பவில்லை. செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்டதையே பேசினேன். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி திங்கள்கிழமை விசாரித்தார். அரசு தரப்பில், “மனுதாரர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனராக உள்ள நிலையில் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை உண்மைக்கு மாறான தகவலை உறுதிப்படுத்தாமல் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மனுதாரரை சமயபுரம் போலீஸார் கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் உள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது,” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இருக்காமல், எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக் கூடாது. உண்மையில் பழநி கோயில் மீது அக்கறை இருந்தால் பழநி கோயிலுக்குச் சென்று அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் அல்லது பழநி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று கூட 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம். மனுதாரர் பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் தமிழகம் முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது,” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x