Published : 25 Sep 2024 04:17 PM
Last Updated : 25 Sep 2024 04:17 PM
கோவை: “இன்னும் 5,10 வருடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. சீரியஸாகவே சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வது போல மனிதர்களால் கொடுக்கும் ஒரிஜினல் வெர்ஷனை ஏஐ-யால் தரமுடியாது. ஆனால்,. அதேசமயம் இசைத் துறையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையலாம்” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில் வருகிற 12-ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களுடன் கான்சர்ட் திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ‘தி கோட்’ படத்தின் பாடலில் ரசிகர்களின் விமர்சனத்தை ஏற்று திருத்தம் செய்தோம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பாடலை இசையமைத்து தரும்படி கேட்டால் செய்து கொடுப்பேன்” என்றார்.
காப்புரிமை குறித்து பேசுகையில், “சில பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. அவர்களிடம் பேசி தான் காப்புரிமை பெற முடியும். காப்புரிமை தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. அது நல்ல விஷயம் தான். பழைய பாடல்கள் புதிய படங்களில் இடம்பெறுவது நல்ல விஷயம் தான். அந்தப் பாடலை அவர்கள் சிதைப்பதாக நான் கருதவில்லை. மாறாக வேறொரு கோணத்தில் அந்தப் பாடலை அவர்கள் மறுஆக்கம் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.” என்றார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பாடல்கள் குறித்து யுவன் கூறுகையில், “இன்னும் 5,10 வருடங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. சீரியஸாகவே சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வது போல மனிதர்களால் கொடுக்கும் ஒரிஜினல் வெர்ஷனை ஏஐ-யால் தரமுடியாது. ஆனால், அதேசமயம் இசைத் துறையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT