Published : 22 Sep 2024 11:03 AM
Last Updated : 22 Sep 2024 11:03 AM

திரை விமர்சனம்: லப்பர் பந்து

ஓவியரான பூமாலை என்கிற கெத்து (அட்டக்கத்தி தினேஷ்), உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் ஆஜராகிவிடுவார்.

அதே ஊரில் பந்துவீச்சில் பூமாலையை, திணறடிக்கிறார் அன்பு (ஹரிஷ் கல்யாண்). இதனால், இருவருக்கும் ஈகோ வளர்கிறது. இதற்கிடையே பூமாலை மகள் துர்காவுக்கும் (சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி) அன்புக்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும் காதலுக்கும் இடையே என்னென்ன நடக்கிறது என்பது கதை.

ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகான ‘மாண்டேஜ்’தான் படம். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் எளியக் குடும்பத்து ஆண்களின் மனதைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டிய இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

கிராமத்து கிரிக்கெட் போட்டிகளில் நிலவும் சாதிய பாகுபாட்டை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் யார்க்கர் ரகம். 'தம்பி மாதிரி' என்று நினைப்பதுதான் பிரச்சினை என்று இடம்பெற்றுள்ள வசனமும் சிந்திக்க வைக்கிறது. இரு கிரிக்கெட்டர்களுக்கு இடையேயான ஈகோதான் கதை என்றாலும் ஆண்களால் பெண் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கதை பேசியிருப்பது பவுன்சர் ரகம். ஆண்களோடு சேர்ந்து ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை உணர்த்தும் வகையில், 'அது சாதி திமிர்னா, இது ஆம்பள திமிரு' என்று இடம்பெற்றுள்ள வசனம் சுளீர். கிரிக்கெட், காதல், சாதிய பாகுபாடு என இரண்டரை மணி நேரத்தில் வெரைட்டியான சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் இயக்குநர்.

40 வயதிலும் வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடுவது, ஒரு பார்வையிலேயே காதல் மலர்வது என சரடுகளும் கதையில் உள்ளன. அரசின் புற்றுநோய் விளம்பரத்தை காமெடி ஆக்கியதைத் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஊகிக்க முடிந்தாலும் அழகான திரைக்கதையால் அது மறந்துவிடுகிறது.

‘அட்டக்கத்தி’ தினேஷூக்கு அழகான கதாபாத்திரம். அதைச் சரியாகப் பயன்படுத்தி சதம் அடித்திருக்கிறார். கர்சீப்பை சுற்றிவிட்டு கிரிக்கெட்டில் அமர்க்களப்படுத்துவது, மனைவிக்கு அஞ்சி பம்முவது, ஈகோவால் கோபத்தின் எல்லைக்குச் செல்வது என நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். பார்வையால் ஈகோவை வெளிப்படுத்துவது, காதலுக்காக உருகுவது என தன் தேர்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். தினேஷின் மனைவியாக வரும் சுவாஸிகா, எளிய குடும்பத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு பாலசரவணனும், ஜென்சன் திவாகரும் உதவியிருக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே, கீதா ஆகியோரும் தேர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் இனிமை. கிராமத்து கிரிக்கெட்டை தினேஷ் புருஷோத்தமனின் கேமரா அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. வீரமணி கணேஷின் கலையாக்கமும் மதன் கணேஷின் படத்தொகுப்பும் படத்துக்குப் பக்கப்பலம். எளிய மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் கிரிக்கெட் பின்னணியில் நேர்த்தியாகச் சொல்லியதில் ‘லப்பர் பந்து’ பறக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x