Last Updated : 14 Aug, 2014 04:47 PM

 

Published : 14 Aug 2014 04:47 PM
Last Updated : 14 Aug 2014 04:47 PM

திரையில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதில் தவறென்ன?- நடிகை குஷ்பு

திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதில் தவறில்லை எனும் தொனியில் நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

'வேலையில்லா பட்டதாரி', 'ஜிகர்தண்டா' மற்றும் ஆமீர்கானின் 'பி.கே' உள்ளிட்ட படங்களுக்கு சமீபத்தில் ஒரு தரப்பினர் எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்டனர்.

'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் மற்றும் 'ஜிகர்தண்டா' படத்தில் வன்முறை காட்சிகள், சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் இருப்பது போன்றவற்றுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆமிர்கான் 'பி.கே' படத்தின் நிர்வாண போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அப்படம் வெளியிட தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்விரு படங்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி ஆனதற்கு மகிழ்ச்சி தெரிவித்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'பி.கே' படங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை வழக்குகளை தள்ளுபடி செய்து, ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு நடிகர் நல்லது செய்யும்போது, அதனை யாருமே பின்பற்றுவது இல்லை. ஒரு நடிகர், ஏழைகளுக்கு உதவுவது, நன்கொடைகளை வழங்குவது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றை செய்கிறார். அதையெல்லாம் யாரும் பின்பற்றாதபோது, சிகரெட் பிடிக்கும் விஷயத்தை மட்டும் கருத்தில்கொள்வது எந்த வகையில் சரி?" என்று கருத்துகளை பதிந்துள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ள பி.எஸ்.விஷி என்ற ரசிகர், "நலலதோ, கெட்டதோ... திரையில் தங்களுக்குப் பிடித்த நாயகர்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று குறிப்பிட்டார்.

அதை மேற்கோள்காட்டி அவருக்கு பதிலளித்த நடிகை குஷ்பு, "நல்ல விஷயங்களைப் பின்பற்றிச் செய்தால் அவை அன்புடன் வரவேற்கத்தக்க அம்சமே" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x