Last Updated : 22 Jun, 2018 12:18 PM

 

Published : 22 Jun 2018 12:18 PM
Last Updated : 22 Jun 2018 12:18 PM

தமிழ் சினிமாவின் வசூல் ராஜா விஜய்!

வெற்றியை யார் வேண்டுமானாலும் அடையலாம். அப்படி வெற்றி பெறுவதற்கு, அப்பாவோ அதிர்ஷ்டமோ யாரோ எதுவோ காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்வதும் வெற்றிமேல் வெற்றியாகக் குவிப்பதும் அப்பாவாலும் முடியாது; அதிர்ஷ்டத்தால் மட்டுமேவும் நடக்காது. அப்படியொரு மெகா வெற்றிக்குச் சொந்தக்காரர் விஜய்.

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயகாந்துக்கு ஹிட்டுக்களைக் கொடுத்தவர். அப்போது சின்னப்பையனாக விஜய்யையும் திரைக்குள் நுழைத்து, வெளிச்சம் பாய்ச்சி வந்தார். வளர்ந்ததும் விஜய்யை வைத்து படம் பண்ணினார். ஆவரேஜ் படங்களாகவும் வெறும் பொழுதுபோக்கு படங்களாகவும் மட்டுமே அவை வந்தன. விஜய் என்றொரு நடிகர், திரைப்பட்டியலில் இருந்தார்.

இயக்குநர் விக்ரமனின் பூவே உனக்காக,  பாலசேகரனின் லவ்டுடே, எழிலின் துள்ளாத மனமும் துள்ளும், பாசிலின் காதல் மரியாதை, வின்சென்ட் செல்வாவின் பிரியமுடன் என எகிறியடித்து ஹிட்டடித்தன. நினைத்தேன் வந்தாய் படமும் பாடல்களும் இன்றைக்கு பேசப்படுகிற, பார்க்கப்படுகிற சினிமாக்களில் ஒன்றாகிப் போனது.

இயக்குநர் சித்திக்கின் ப்ரண்ட்ஸ், காவலன் இன்னும் வெற்றிகளைக் குவிக்க உதவின. குவித்தன. விஜய் படமா. டான்ஸ் நல்லா ஆடுவாரு என்றார்கள். கொஞ்சம் கிளாமர், கொஞ்சம் ஆக்‌ஷன் இது ரெண்டையும் ஜுஸ் போட்டுக் கொடுப்பாங்க என்று விமர்சித்தார்கள்.

ஒரு பொழுதுபோக்குக்கு என்னென்னவெல்லாம் சினிமாவில் தேவையோ அதையெல்லாம் கொடுத்தார் விஜய். அவரின் எல்லாப் படங்களிலும் காமெடியும் நடனமும் சண்டைக்காட்சிகளும் என கலந்துகட்டி வந்து, வெற்றி பார்முலாவைக் கொடுத்தன. தரணியின் இயக்கத்தில், ஒக்கடு... கில்லியாக வந்தது. டிவியில் எப்போது ஒளிபரப்பினாலும் அதைப் பார்க்க பெரிய கூட்டமே உண்டு.

விஜய் அறிமுகமாகும்போதே, அவரின் குரலும் பாடல்களால் பரிச்சயமாயிற்று. ‘இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்’ என்று பாட்டின்போதே, விளம்பரப்படுத்திய யுக்தியும் விஜய்யின் அப்பாவின் ஸ்டைலானது. கொஞ்சம்கொஞ்சமாக, விஜய் மேலே வந்தார். ஒரு வட்டத்துக்கும் கட்டத்துக்கும் பிடித்துப்போன விஜய்யை, எல்லா தரப்பினருக்கும் பிடித்துப் போனது. அவரின் டபுள் ஆக்ட் அழகிய தமிழ் மகன் சரியாகப் போகவில்லை. ஆனால் பிறகு வெளிவந்த கத்தி, எங்கேயோ கொண்டு சென்று அமர்த்தியது அவரை!

தலைவா, காவலன் படங்களுக்கு தேவையே இல்லாமல் அப்போதைய அரசால் பிரச்சினை கிளம்பியது. தடைகள் போடப்பட்டன. ஆனால் வழக்கம் போல் அமைதியாக இருந்தே காரியம் சாதித்தார் விஜய். விழாக்களிலும் மேடைகளிலும் குரலைக் கூட உயர்த்தாமல் பேசுகிற, பவ்யக்காரர் விஜய். சினிமாவில், கேமராவுக்கு முன்னே நின்றுவிட்டால், ரவுசு பண்ணுவார். இவரின் பஞ்ச் வசனங்கள், கைத்தட்டலுக்கு உரியவை. அதேசமயம் வலைதளங்களில் நேர்மாறாகவும் குரல் எழுப்பப்பட்டன.

விஜய் படங்களில் எப்பவுமே பாடல்கள் மொத்தமும் ஹிட்டாகிவிடும். அது யார் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் றெக்கை கட்டி பறக்கும். நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், நினைத்தேன் வந்தாய், நிலாவே வா பாடல்களெல்லாம் இன்றைக்கும் எவர்கிரீன் எவரெஸ்ட்டில் இருக்கின்றன.

பேரும்புகழும் வரும்போதே, மன்றங்கள் அதிகரிக்கும் போதே அரசியல் குறித்தும் பேசப்படுவது வாடிக்கையாகிவிட்ட ஒன்றாகிவிட்டது. அந்தக் கட்சிக்குப் போகப்போகிறார், இந்தக் கட்சியில் சேரப்போகிறார், தனியே கட்சியே தொடங்கப்போகிறார் என்றெல்லாம் இப்போது வரை எகிறிக்கொண்டிருக்கின்றன எதிர்பார்ப்புகள். விஜய்... இப்போதும் தன் ஸ்டைலில் அமைதியையே பதிலாக்கித் தந்துகொண்டிருக்கிறார்.

விஜய்... இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரம். போட்ட முதலுக்கு மோசம் வராமலும் லாபம் தந்தும் காபந்து செய்யும் ஆபத்பாந்தவன் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். வசூல் மன்னனா என்று வில்லன் கேட்கும்போது, ‘அப்படித்தான் சொல்றாங்க’ என்று சொல்லுவார். இப்படியொரு டயலாக் வைக்கவேண்டுமெனில், அதற்குள்ளே எவ்வளவு உண்மையும் உழைப்பும் இருந்திருக்கவேண்டும். அந்த உண்மையான வளர்ச்சியும் கடும் உழைப்பும்தான் விஜய்யின், விதை; அஸ்திவாரம்!

கத்தி, துப்பாக்கி, தெறி, மெர்சல் என்று கதைகளிலும் சமூக நலனிலும் அக்கறையுடன் முடிவெடுக்கிறார். இதனை அரசியல் களத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கிறவர்களும் உண்டு. அவரின் அரசியல் பிரவேசத்தை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுக்கட்டும். எடுக்காமலேயே போகட்டும். இன்றைய தேதிக்கு எம்ஜிஆர், ரஜினி வரிசையில் வசூல் ராஜா விஜய்தான் என்பதில் மாற்றமே இல்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!

விஜய்யின் இன்னொரு முக்கியமான ப்ளஸ்... மனிதர், அறிமுகமாகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே ஒல்லிகில்லியாக இருக்கிறார் என்பதுதான் இவரைப் பற்றிய எல்லோருக்குமான ஆச்சரியங்கள்.

நீங்க ஒல்லியாவே... எப்பவும் போல கில்லியாவே இருங்க விஜய். இன்னும் இளமையா, ஆரோக்கியமா, அதிரிபுதிரி வெற்றிகளெல்லாம் அடைய வாழ்த்துகள் விஜய்.

22.6.18 இன்று பிறந்தநாள் அவருக்கு. விஜய்... மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x