Last Updated : 22 Jun, 2018 05:12 PM

 

Published : 22 Jun 2018 05:12 PM
Last Updated : 22 Jun 2018 05:12 PM

முதல் பார்வை: டிக்:டிக்:டிக்

விண்கல்லால் பூமியில் உள்ள 4 கோடி பேர் இறக்கக்கூடும் என்ற ஆபத்து நெருங்க, அதை எதிர்கொள்ளும் விதமே 'டிக்:டிக்:டிக்'.

ஒரு விண்கல் இந்திய தேசத்தை அழிக்கப்போவதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிந்து அதிர்ச்சியாகிறது. இதை முறியடிக்க விண்வெளி வீரர்களைத் தயார் செய்யும் முனைப்பில் இறங்குகிறது. ஏவுகணை கொண்டு விண்கல்லை உடைக்கலாம் என்று முடிவெடுத்து, அந்த ஏவுகணையை முறையற்ற வழியில் திருட ஒரு நபரைத் தேடுகிறது. புத்திசாலித் திருடன் ஜெயம் ரவி தன் மகனுக்காக அந்த வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறார். ஆனால், அந்த வேலை அவ்வளவு சுலபமில்லை என்பது ரவிக்குப் புரிகிறது. இதனிடையே ஏவுகணையத் திருடி என்னிடம் தந்தால் மட்டுமே உன் மகன் உயிரோடு கிடைப்பான் என்று நாசகார வில்லன் மிரட்டுகிறார்.

ஏவுகணையைத் திருட முடிந்ததா, 4 கோடி மக்களா? மகனா? என்பதில் ரவி என்ன முடிவெடுக்கிறார், நாசகார வில்லன் யார், விண்கல்லைத் தகர்க்கும் முயற்சி என்ன ஆனது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது 'டிக்:டிக்:டிக்'.

விண்வெளியை மையப்படுத்தி ஒரு முழுப் படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனின் முயற்சியைப் பாராட்டலாம். காதல், டூயட் என்று மசாலாத்தனங்களைக் கலக்காமல் கதைக்குத் தேவையான அம்சங்களில் மட்டும் இயக்குநர் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த முயற்சி முழுமையடையாததுதான் குறை.

ஜெயம் ரவி கதாபாத்திரம் உணர்ந்து தன்னை இயக்குரிடம் ஒப்படைத்திருக்கிறார். மகன் மீதான பாசம், தேசப்பற்று குறித்த விளக்கம், தப்பு செய்யாத இளைஞனுக்காக சிறை சென்றாலும் கவலைப்படாமல் தண்டனை அனுபவிப்பது, முயற்சியைக் கைவிடாமல் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது என தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ் படம் முழுக்க வருகிறார். விண்வெளியில் மிதப்பது குறித்து செய்முறைப் பயிற்சி அளிப்பது, விண்வெளி வீரருக்கான அடிப்படைகளை கற்றுக்கொடுப்பது, ஏவுகணை குறித்த செயல்பாடுகளில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

ரமேஷ் திலக், அர்ஜூனன் ஆகிய இருவரும் சிரிக்க வைக்கிறார்கள். ஜெயம் ரவியுடன் இணைந்து படம் அலுப்பு தட்டாமல் இருக்க உறுதுணை புரிகிறார்கள்.

ஜெயப்பிரகாஷ் வழக்கமான நடிப்பைக் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். ரித்திகா சீனிவாஸ், பாலாஜி வேணுகோபால், வின்சென்ட் அசோகன் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ஜெயம் ரவி தன் மகன் ஆரவ் ரவிக்கு பெருமை சேர்க்க நினைத்திருக்கிறார். அதற்கு குறும்பா பாடலை டெடிகேட் செய்திருக்கிறார்.

வெங்கடேஷ் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. இமானின் 100-வது படம் இது. பின்னணி இசையிலும், குறும்பா, டிக் டிக் டிக் பாடலிலும் அதற்கான உழைப்பு ஓங்கி ஒலிக்கிறது.

அப்பா-மகன் உறவு, விண்கல்லை உடைக்க வேண்டிய சூழல் என்ற இரண்டு மைய இழைகள் படத்தில் உள்ளன. மகனைக் காப்பாற்ற வேண்டி விண்கல்லை உடைக்க வேண்டி தயார்படுத்தும் ஏவுகணையை வில்லனிடம் ஒப்படைக்க வேண்டிய சிக்கலான சூழல் ஏற்படுகிறது. அதை எப்படி ஜெயம் ரவி கையாள்கிறார் என்பது திரைக்கதையின் முக்கிய முடிச்சு. அதைக் கையாண்ட விதம் ஓ.கே. என்று மட்டுமே சொல்ல வைக்கிறது. பாதுகாப்புக் கோட்டைத் தாண்டிச் செல்வது குறித்து விண்வெளியில் இருக்கும் வீரர்கள் பூமியில் இருக்கும் குழுவுக்கு தகவல் சொல்கிறார்கள். அதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை நிர்வாகி உடனடியாக நம்பிவிடுவது நாம் நம்பும்படியாக இல்லை.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் போதிய அனுபவமும், திறமையும் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத ஏவுகணை குறித்த செயல்பாட்டை ஜெயம் ரவி மட்டும் எப்படி அறிந்துகொள்ள முடிகிறது என்பது விடை தெரியாத கேள்வி. அதுவும் கண்ணாடி, கறுப்புப் பகுதியை வைத்து ஏவுகணையை மறைப்பதாக நாடகமாடி பிறகு ஏவுகணையைத் திருடுவதாகக் காட்சிப்படுத்தி இருப்பதில் நம்பகத்தன்மை இல்லை.

இன்னொரு நாட்டின் ஏவுகணையத் திருடி அவர்கள் நாட்டையே அழிக்க குறி வைப்பதாகச் சொல்லும்போது, அதுகுறித்த பதற்றமோ, மீட்டெடுக்கும் ஆர்வமோ அந்த நாட்டு விண்வெளிப் படையினர் ஏவுகணை தொலைந்துபோவதாக தன் நாட்டுக்கு ரகசியக் குறிப்பு அனுப்புவது காமெடி.

200 டன் கொண்ட ஏவுகணையை  ஈர்ப்புசக்தி இல்லாத இடத்தில் அசாதாரணமாக ஜெயம் ரவி தூக்கி அசரடிக்கிறார். நமக்குத்தான் அந்த மேஜிக் ஒட்டாமல் அந்நியமாக நிற்கிறது. இப்படி ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் இடிக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக யூகிக்கக்கூடிய அளவுக்கே வில்லன் பாத்திரத்தை இயக்குநர் கட்டமைத்திருக்கிறார். எதிர்பார்த்த மாதிரியே அப்பாத்திரம் அமைந்துவிடுவதால் அதிலும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது.

இவற்றைத் தவிர்த்து இரண்டரை மணிநேரம் லாஜிக் இல்லாமல், பொழுதுபோக்காக படம் பார்க்க விரும்பினால் 'டிக்:டிக்:டிக்’ உங்களுக்குப் பிடிக்கும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x