Last Updated : 12 Sep, 2024 07:05 PM

15  

Published : 12 Sep 2024 07:05 PM
Last Updated : 12 Sep 2024 07:05 PM

தங்கலான்: புரிந்ததும் புரியாததும் - ஓர் ஆழமான திரைப் பார்வை

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வந்த திரைப்படங்களில் ட்ரெய்லராக தலையில் வைத்துக் கொண்டாடப்பட்டு, திரைக்கு வந்த பின்பு கலவையான வரவேற்பைப் பெற்ற படங்களில் ‘தங்கலான்’ முதலிடத்தில் இருக்கிறது என்றால் மிகையில்லை என்றே நான் சொல்வேன். நடிகர் விக்ரமின் அசுர உழைப்புக்காக படத்தை கொண்டாட நினைப்பவர்களும் தங்களின் பாராட்டில் ஒரு ‘க்’ வைத்தே அதைச் செய்திருந்தனர். அந்த அளவுக்கு புரிந்துகொள்ள முடியாத ஒரு படமா பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்? - விடை தேடலாம் வாருங்கள்.

ஒரு யதார்த்தம், ஒரு திரை அனுபவம் என இரண்டு நிகழ்வுகளை நினைவூட்டுவதலில் இருந்து இந்தக் கட்டுரையை துவங்க விரும்புகிறேன். முதலில் யதார்த்தம்: நாம் அனைவரும் துக்கம் மறந்த தூக்கத்தில் இருக்கும்போது, திடீரென உயரமான இடத்தில் இருந்து கீழே விழும் உணர்வு வர, நம்மை மீறிப் பதறி எழுந்து படுத்திருந்த இடத்தை தடவிப் பார்த்திருப்போம்... தரையிலோ, சமதளத்திலோ தான் உறங்கினோம் என்ற அறிவு இருந்தாலும், அந்தப் பதற்றம் எங்கிருந்த வந்தது. அந்த உணர்வின் பொருள் என்ன? இன்று ஹோமோ சேப்பியன்ஸ்களாக நாம் பரிணமித்து இருந்தாலும், அன்று காடுகளில் உலவி, மிருகங்களுக்கு பயந்து உயரமான மரங்களில் ஏறி அமர்ந்து உறங்கிய நமது எள்ளுப்பாட்டன்களின் கனவின் நீட்சி... கனிணி யுகத்திலும் கனவின் வழி தொடர்கிறது. நினைவு வழி நீட்சியே இந்த சமூக கட்டமைப்பு என்பதன் நிஜம்!

திரை அனுபவம்: விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் ‘பிதாமகன்’ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம். இன்றுள்ளது போல் சமூக ஊடக வளர்ச்சி இல்லாத காலம் அது. என்றாலும் படத்தின் துவக்கத்தை சுடுகாடு ஒன்றில் குழந்தை பிறப்பதில் இருந்து தொடங்கியதற்காக படத்தின் இயக்குநர் பாலா வெகுவாக கொண்டாடப்பட்டிருந்தார். படத்தில் வெகுமக்களால் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம் ‘கஞ்சா குடுக்கி’ (கஞ்சா கறுப்பு) என்ற பாத்திரத்தின் தொடர் இருப்பு. படத்தின் தொடக்கத்தில் கதை நாயகன் ஊருக்குள் வரும்போது ‘அண்ணே இன்னும் கொஞ்ச நாள்ல என்னை அங்க கொண்டு வந்துருவாங்க... எரியும் போது முருக்கி எந்திருச்சா அடிக்காத. அதட்டுண்ணே நானே படுத்துப்பேன்...’ என வசனம் பேசும் கஞ்சா குடுக்கி, படத்தின் இறுதி வரை ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டே இருக்கும்.

அன்று, விளிம்புநிலை மக்களை காட்சியாக்கும் பாலாவின் திரைப்படங்களில் சின்னக் கதாபாத்திரத்தின் நீட்சி சிறந்த திரைக்கதையாக்கமாக சிலாகிக்கப்பட்டது. விக்ரமின் அசுர நடிப்பு, சூர்யாவின் மாற்றம், லைலாவின் சிணுங்கல், கவர்ச்சி காட்டாத சிம்ரனின் நடன வரிசைகளுக்கு மத்தியில் கஞ்சா குடுக்கியை உற்று நோக்கிய தமிழ் சினிமா ரசிகன், தங்கலானில் தனது திரை ரசனையை நீட்டிக்கத் தவறிவிட்டானோ என்றே தோன்றுகிறது.

இனி தங்கலான்... கோலார் தங்க வயல் தமிழர்களின் கதை என ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டதால் கதை தொடங்குவதே 19-ம் நூற்றாண்டில்தான். அரசர்கள் காலத்தில் கொள்ளுப் பாட்டன்களுக்கு முந்தைய பாட்டன் ஒருவன் பெற்றுத் தந்த நிலத்தை வரி வஞ்சத்தால் இழந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பூர்வகுடியான தங்கலானில் இருந்தே கதை ஆரம்பமாகிறது. இழந்த நிலத்தை மீட்க தங்கலான் தன் எள்ளுப்பாட்டனின் தடம் தொடர்ந்து கோலாரில் தங்கம் தேடி அலைந்து கண்டடைகிறான். தங்கலான் தேடி அடைந்த தங்கம் என்ன என்பது இயக்குநர் பா.ரஞ்சித் சொல்ல வந்த இந்திய வரலாறு மூடி மறைத்து வைத்திருக்கும் நிஜ முகம்.

நினைவின் நீட்சியே வரலாறு! - சரி தங்கலானுக்கு கோலாரில் தங்கம் இருப்பது எப்படித் தெரியும்? - இந்தக் கேள்விக்கான விடையாக படம் சொல்லும் நிஜம் நினைவுப் பெட்டகத்தில் புதைந்து கிடக்கும் கதைகள். அறுத்து அடித்த நெல்லுக்காக களத்தில் குடும்பத்துடன் காவலிருக்கும் தங்கலான், தன் குழந்தைகளுக்குச் சொல்வது முகம் தெரியாத பாட்டனின் தங்கம் தேடி அலைந்த கதையைத்தான். அது முதல் முறையாகச் சொல்லப்படும் கதை இல்லை. அதற்கு முன்பே அந்தக் கதை பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. தெரிந்த கதைதான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் புராண இதிகாச கதைகளைப் போல, மக்களை தெய்வம் மறக்காமல் இருக்க, மக்கள் தெய்வத்தை மறக்காமல் இருக்க வருடம் தோறும் நிகழ்த்திக் காட்டப்படும் கொடை விழாக்களைப் போல.

மெட்டிலா பாடல்கள்: அப்படியென்றால், அது ஒரு தகப்பன் தன் குழந்தைகளுக்கு வெறும் கதை கூறும் நிகழ்வு மட்டும் இல்லை. அதுவொரு கொண்டாட்டம். கதை வழி வரலாற்றை பாதுகாத்து கடத்தும் குடும்பக் கொண்டாட்டம். தங்கலான் தனது குழந்தைக்கு சொன்னதைப் போல அவனுக்கும் அந்தக் கதை பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் கொண்டாட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் தங்கத்தின் தடத்தை அலையும் போது சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு முறையும் வழித்தடத்தின் குறிப்புகளை ஏட்டில் இருந்து இல்லாமல் தன் நினைவுப் பேழையில் இருந்து மெட்டுக்கள் இல்லாத பாடல்களாக மீட்டெடுக்கிறான். ஒருவேளை தங்கலான் இதைச் செய்யாதிருந்தால் அவன் மகன் அசோகனுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவனும் தந்தையைப் போல நினைவின் வழி தங்கத்தின் தடம் தேடி பயணித்திருப்பான். காரணம் அது வரலாற்றின் நீண்ட பாதை.

வெள்ளைக்காரன் தேடிய அறிவு: தங்கலானுக்கு குடும்ப வழி கதையாக தங்கத்தின் தடம் தெரிகிறது. அதைத் தேடி எடுக்க நினைக்கும் வெள்ளைக்காரருக்கு அந்தக் கதை எப்படித் தெரிந்தது. பதில், அவருக்கு முன்பு வந்தவர்கள் எழுதி வைத்தக் குறிப்புகள். அந்தக் குறிப்புகள்தான் தங்கத்துக்காக தங்கலானைத் தேடி வர வைத்திருக்கிறது. அது வெறும் கூலிகளுக்கான தேடல் மட்டும் இல்லை. கூலிகள் தான் வேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த வெள்ளையர்களால் அவர்களை எந்த ஊரில் இருந்தும் பெற்றுவிட முடியும்.

ஆனால், அவர்களை வடஆற்காடு நோக்கி தங்கலானைத் தேடி வர வைத்தது எது? பரம்பரை பரம்பரையாக கதைகள் வழி கடத்தப்பட்டு வந்த அறிவின் நீட்சி.. தங்கம் இருப்பதை உறுதி செய்து விட்டு கூடுதல் ஆட்களுக்காக கிராமத்துக்கு வந்து தங்கலான் பேசும் வசனங்கள் மிகவும் முக்கியமானவை. ‘அந்த வேலையைச் செய்ய நம்மள விட்டா இந்த ஜில்லாவிலேயே ஆட்களே இல்லையா(ம்)... நம்ம தான்... நம்மால மட்டும் தான் தங்கத்தை தேடி எடுக்க முடியுமா(ம்)’ - இது வெறும் ஆசை வார்த்தைகள் இல்லை தங்கம் இருக்கும் வழித்தடம் மட்டும் இல்லை. அந்த உலோகம் குறித்த அறிவும் வழிவழியாக கடத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்று உண்மையின் நிஜம். தோல் பதனிடுதல், அதைக் கொண்டு இசைக் கருவி செய்தல், சுண்ணாம்பு கல் எடுத்தல் என பூர்வக்குடிகள் செய்ய எல்லா வேலைகளுக்கு மிகப் பெரிய உலோக, வேதியியல் அறிவு தேவைப்பட்டது.

தொடர்ந்து வந்த குறுவாள்: நான் படம் பார்த்த பல பேரிடம் கேட்டு அனைவரும் அப்படியா என கேட்ட ஒரு விஷயம் தங்கலானின் குறுவாள். சிங்க முக கைப்பிடி போட்ட அந்தக் குறுவாள் தங்கலான் பார்த்திருக்காத, பார்த்திருக்கவே முடியாத அவனின் முகமறியா முப்பாட்டனுக்கு சோழ அரசன், தங்கம் தேடிக் கொடுத்ததற்காக பரிசாக தந்தது. அது தங்கலானுக்கு எப்படி கிடைத்தது என்ற சின்னக் கேள்வியை தமிழ் சினிமா ரசிகன் கேட்டிருந்தால் படம் ஒட்டு மொத்தமாய் புரிந்திருக்கும். குறுவாள் என்பது இங்கே ஒரு குறியீடு. வழிவழியாக கடத்தப்படும் கொண்டாட்டம், வலி, வரலாறு, அறிவின் குறியீடு. தங்கலான் தங்கம் என்றக் குறியீட்டை கொண்டு பூர்வகுடிகளின் நினைவின் வரலாற்றைத் தேடி அலை முயன்றிருக்கிறது. இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கியங்களில் பல இப்படி பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு தொகுக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.

வரலாற்றை திரும்பிப் பார்க்க அச்சமா? - தங்கத்தை தேடி செல்வதுதான் கதை. அதன் வழியாக படம் பல வரலாற்று உண்மைகளைப் பேசுகிறது. தங்கலான் குழந்தைகளுக்குச் சொன்ன கதையின் வழியாக தங்கம் தேவைப்பட்டது சோழ ராஜாவுக்கே, தங்கலானின் தாத்தாவுக்கு இல்லை. தங்கத்துக்காக ராஜா எதையும் செய்யத் தயாராக இருந்தார். அதற்காக தாத்தா உழைக்கத் தயாராக இருந்தார். அதற்காக அவர் கேட்டது தன் கூட்டத்தாருகான அடிப்படைத் தேவையை (உழைக்க நிலம்). ஆனால் இருவருக்கும் இடையில் அறம் கூறி ஓர் அந்தணர் இடைமறித்தார்.

தங்கலானின் கதையில் தங்கம் வெள்ளைக்காருக்கு தேவைப்பட்டது. அதற்காக தன் கூட்டத்தாருடன் தங்கலான் உழைக்கத் தயாராக இருந்தான். பதிலாக அவன் கேட்டது நியாயமான கூலியும் மரியாதையும். தங்கலானைக் கட்டித்தழுவிக் கொண்டாட வெள்ளையர் தயாராக இருந்த போதும், இடையில் நின்று மரித்தது அந்தணனின் காலமாறுதலான தூபாஷி (மொழிபெயர்ப்பாளர்). இருவரின் கையிலும் ஒரு கோல் இருக்கும். தங்கலான் பூர்வகுடிகளின் அறிவின் நீட்சியின் வரலாற்றை மட்டும் கதை வழி தேடி அடையவில்லை. அவர்கள் வீழ்த்தப்பட்ட வரலாற்றையும் சேர்த்த படம் பேசுகிறது. “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும்...” என சோழனின் பெருந்தன்மையைப் பேசி பேசி கொண்டாட விழையும் தமிழ்ச் சமூகம், அவ்வரசர்கள் தானம் செய்ய வல்லப மங்கலங்களை (அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்) திரும்பிப் பார்க்க அச்சப்படவே செய்கிறது.

படம் சொன்ன வரலாற்று நீட்சிகளில் முக்கியமானவை: சைவ அரசனான சோழன் தங்கத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். அதற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தவருக்கு படைத் தளபதி பதவியும் கொடுக்கத் தயாராக இருந்தார். காலத்தின் தேவைக்காக ஒடுக்கப்பட்டவர்களில் சிலரை நாயன்மார்களாக ஏற்றுக்கொண்டாலும் உண்மையான விடுதலையைத் தரவில்லை. வரலாற்று சாட்சி நந்தன். பெருமணலெல்லாம் தங்கமாக இருந்தாலும் அது எடுத்த மக்களுக்கு மறுக்கப்பட்டது.

வைகுண்டத்தில் இடமுண்டு எனக் கூறி அதிலுள்ள ஒரு சமயப் பெரியவரால் பூணுல் போடும் சலுகையைப் பெற்றுத்தந்த வைணவமும் முழுமையான விடுதலையைத் தரவில்லை. வைகுண்ட தோற்றம் காட்டி மின்னி உள்ளுக்குள் பாறையாக இறுகிப்போய்தான் இருந்தது. வெள்ளையானுக்காக தங்கலான் கூட்டத்தார் தோண்டிய தங்கப்பாளங்கள் போல.

இவை தவிர தன் கூட்டத்தாரை தங்கம் எடுக்கத் தங்கலான் கூட்டி வந்ததும், வெள்ளையர் பேசுவதும், அதை தூபாஷி மொழி பெயர்க்கும் காட்சி. வெள்ளையரின் பேச்சை தூபாஷி வேண்டுமென்ற வளைத்துக்கூறும் போது, தங்கலான் அதை மறுத்து, சரியாக தன் கூட்டத்தாரிடம் எடுத்துக் கூறுவார். இந்த மண்ணுக்கு வரும் எல்லா புதியனவும் தங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற உணர்வுக்கு தங்கலான் மூலம் ஒரு சாட்டையடி விழுந்திருக்கும். வாய்ப்பு கிடைத்தால் புதிய மாற்றங்களை எல்லோராலும் உள்வாங்க முடியும் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு சாட்சி. ஒருவகையில் ஆரியத்துக்கும், பவுத்தத்துக்குமான போரை இந்திய வரலாறு என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றே இந்தப் படம்.

இயக்குநர் ரஞ்சித் தேர்ந்த திரை மொழியின் மூலம் பிரச்சாரம் இல்லாமல் இந்தப் படத்தை அணுகி, தான் சார்ந்திருக்கும் சினிமாவுக்கு நேர்மை செய்திருக்கிறார். ‘கபாலி’யிலும், ‘காலா’விலும் நாயக பின்பத்துக்காக செய்த பிரச்சாரங்களைப் போல இந்தப் படத்தில் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதை தேர்ந்த திரை மொழி மூலம் நிகழ்த்திக் காட்டி தன்னை தேர்ந்த கலைஞனாக நிலைநிறுத்தியிருக்கிரார்.

என்றாலும், தான் கூறவந்த பூர்வகுடிகளின் கதையில் அவர்களின் கஷ்டங்களை மிகவும் மேலோட்டமாகவேச் சொல்லிச் சென்றிருக்கிறார் பா.ரஞ்சித். வெறும் சாதி பெருமை பேசும் படங்களில் கூட அங்கு பெண்களின் இழிநிலை இலை மறைக்காயாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அத்தகைய உண்மைகளுக்கு இந்தப் படத்தில் இடமில்லை என்பது ரஞ்சித்தின் மாபெரும் சறுக்கலே.

படம் பார்த்த பெரும்பாலனவர்கள் சொன்னது ஆரத்தி புரியவில்லை, குழப்புகிறாள் என்பதே. வெறும் வலிகளின் கதைகளாக மட்டும் ஒரு தொன்மத்தை நாம் கடத்திக் கொண்டு வந்து விடமுடியாது. அதில் சில சாகசங்களுக்கும் இடம் வேண்டும். அப்படியான தொன்மத்தின் தொடர்ச்சியே ஆரத்தி. ஹாரிப்பாட்டரை, அதில் வந்த கனவுகள் கதைகள், மாயா ஜாலங்கள், அமெரிக்க மண்ணின் சூப்பர் நேச்சுரல் கதாயநாயகர்களை எல்லாம் புரிந்துகொள்ள முடிந்த தமிழ்சினிமா ரசிகர்களை ஆரத்தி குழப்புகிறாள் என்பது நகை முரணே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x