Published : 11 Sep 2024 12:00 PM
Last Updated : 11 Sep 2024 12:00 PM
சென்னை: மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கொந்தளிப்புடன் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 'பரம்பொருள்' அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த 28-ம் தேதி ‘தன்னம்பிக்கை ஊட்டும்’ பேச்சு என்ற பெயரில் சொற்பொழிவு ஆற்றினார். அப்போது, அவர் மூடநம்பிக்கையை முன்வைத்து பேசியதும், மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பலரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் வீடியோ பதிவொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் “என்னங்க இது. யாரோ ஒருத்தர் நான் ஆன்மிக குரு என்று கண்டதை உளறிக்கொண்டு இருந்தாலும், நீங்களும் பெட்ஷீட் எல்லாம் எடுத்துக் கொண்டு முன்னாடி போய் உட்கார்ந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொள்வீர்களா? உண்மையான குரு என்பவர்களை நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். இப்படி தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி மைக் எல்லாம் மாட்டி எல்லாம் நடக்காது. உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறீர்கள்?
உலகத்திலேயே எளிதான விஷயம் என்றால் அது தியானம்தான். அனைத்து மதங்களும் போதிப்பது கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பது தான். உலகத்தில் எளிதான விஷயத்தை நாம் ஒப்புக்கொள்வோமா, அதற்கு உருளணும், மந்திரம் சொல்லணும் என்பது எல்லாம் உங்கள் மனது சொல்வதுதான். நீங்கள் உங்களுடைய நாசியில் நினைப்பை வையுங்கள். மூச்சை உள்ளே இழுப்பது, வெளியே விடுவது பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். அது தன்னால் நடக்கும். இடையே வேறு ஏதேனும் நினைப்பு வைத்தால், அதை தடுக்க முயற்சி பண்ணாதீர்கள். சிறிது நேரத்தில் தானாக போய்விடும். மீண்டும் உங்கள் நினைப்பை நாசியில் வைத்துக் கொள்ளுங்கள். இதைத் தான் நீங்கள் செய்ய வேண்டும்.
காலங்கள் செல்ல செல்ல மற்ற நினைப்புகள் எல்லாம் நிற்கத் தொடங்கிவிடும். இதைத்தான் புத்தர் சொல்கிறார். நீச்சல் கற்றுக் கொள்ள தொடங்கும்போது, முயற்சி செய்துக் கொண்டே இருந்தால் ஒருநாள் தானாக நீச்சல் அடிக்க தொடங்கிவிடுவீர்கள். இதற்கு மாற்றுக் கருத்து என்று உலகத்தில் இருக்கும் யாரேனும் ஒருவர் சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன். மாற்றுக் கருத்தே கிடையாது” என்று செல்வராகவன் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...