Published : 10 Sep 2024 04:26 PM
Last Updated : 10 Sep 2024 04:26 PM
சென்னை: விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர் ‘ஜெயம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதால் ‘ஜெயம் ரவி’ என்ற புனைப்பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது மூத்த சகோதரர் ராஜா திரைப்பட இயக்குநராக உள்ளார்.நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் அக்டோபர் 10-ம் தேதி அன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பின்புலம்: நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போவதாகக் கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை ஜெயம் ரவி உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தியுடனான என் திருமண வாழ்விலிருந்து விலகுவது என்கிற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்வுக்காகவும் எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு. இந்த விஷயம் என் தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment