Published : 09 Sep 2024 08:43 AM
Last Updated : 09 Sep 2024 08:43 AM
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ், உறுப்பினர்கள் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா,ஸ்ரீமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், டெல்லி கணேஷ், சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி உள்ளிட்ட 10 பேருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் அவர் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும்வழங்கப்பட்டன. படித்து 3 பட்டங்கள் பெற்றதற்காக முத்துக்காளைக்கும் தங்க டாலர் வழங்கப்பட்டது. பொதுக்குழுவில் நிர்வாகிகளின் பதவி காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், நடிகர் கார்த்தி பேசியதாவது: சங்க கட்டிடம் கட்ட ஜனவரி மாதம் தான் வங்கிக் கடன் கிடைத்தது. ரூ.30 கோடி கேட்டோம்.அதில் 50 சதவிகிதத்தை வைப்புத் தொகையாகக் கேட்டார்கள். பிறகு ரூ.25 கோடி கடன் கிடைத்தது. மே மாதம் வேலைகளை மீண்டும் தொடங்கி இருக்கிறோம். 5 வருடம் தாமதமானதால் இதற்குமுன் பணியாற்றிய என்ஜினீயர்கள், ஆர்கிடெக்டுகளை மீண்டும் கொண்டு வருவது சிரமமாக இருந்தது. வங்கியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கணக்கு வழக்குகளைப் பார்த்து மீண்டும் பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். கடந்த 3 மாதமாக வேலை வேகமாக நடக்கிறது. நவம்பர் மழைக்கு முன் வெளிக் கட்டமைப்பை முடித்துவிடவேண்டும். மார்ச் மாதத்துக்குள் மொத்த வேலையையும் முடிப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.
சங்க கடனை அடைப்பதற்காக, கலைநிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். அது மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ரஜினிசார் ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். நான் மேடையில் நடிக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். அதே போல கமல் சாரும் சேர்ந்து பண்ணுகிறேன் என்று சொன்னது உற்சாகமாக இருக்கிறது. பெண்களுக்கான பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாக ரோகிணி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளோம். பிரச்சினைகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்களும் இமெயில் முகவரியும் பெண் உறுப்பினர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு கார்த்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT