Published : 06 Sep 2024 07:34 PM
Last Updated : 06 Sep 2024 07:34 PM
சென்னை: நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இப்படத்தின் மூலமாக வசூலாகும் தொகையை உயர் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில் ‘குணா’ படத்தின் பதிப்புரிமை தங்களுக்கே சொந்தம் எனக்கூறி அந்தப் படத்தை மறுவெளியீடு செய்ய தடை விதிக்கக் கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குணா’படத்தை மறு வெளியீடு செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமீடு மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், “‘குணா’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமை எங்களிடமே உள்ளது. இருந்தாலும் பதிப்புரிமைக்கான உடன்படிக்கையில் காலம் குறிப்பிடவில்லை என்றால் அது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்படி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டுடன் அந்த பதிப்புரிமை முடிவுக்கு வந்து விட்டது. எனவே ‘குணா’ படத்தின் பதிப்புரிமைக்கு கன்ஷியாம் ஹேம்தேவ் தற்போது உரிமை கோர முடியாது. எனவே இடைக்காலத் தடையை நீக்கி படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய அனுமதிக்க வேண்டும்,” என வாதிட்டார்.
இதையேற்ற நீதிபதி, “நடிகர் கமல் நடித்த ‘குணா’ திரைப்படத்தை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்துள்ள நீதிபதி, குணா மறுவெளியீட்டின் மூலமாக திரையரங்குகளில் வசூலாகும் தொகையை இந்த வழக்கின் பெயரில் உயர் நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டு, அந்த தொகையை யாருக்கு வழங்குவது என்பது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது எனக் கூறி விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT