Published : 28 Aug 2024 10:35 PM
Last Updated : 28 Aug 2024 10:35 PM
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் தன்னுடைய சிறுகதையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “’வாழை’ படம் பார்த்தேன். நான் எழுதிய சிறுகதை அப்படத்தில் அப்படியே இருப்பதாக நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள். படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாழையடி’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ளேன். அதில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே இருக்கிறது.
சினிமாவுக்காக ஒரு சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் வரும் சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவைதான். வாழைத்தார் சுமப்பதன் மூலமாக இரண்டு சிறுவர்களுடைய உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? இதுதான் என் கதையிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜும் அதைத்தான் செய்திருக்கிறார்.
ஒருவேளை அவர் என்னுடைய கதையை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். அவரே வாழையையும் சுமந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுவர்கள் படக்கூடிய கஷ்டங்களுக்கு உருவம் கொடுத்தவன் என்ற முறையில் நான்தான் அதற்கு முழு உரிமையானவன்” இவ்வாறு சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
சோ.தர்மனின் இந்த பேட்டி வெளியாகி சில மணி நேரங்களில் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் ‘வாழையடி’ என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாஸ்டர் பொன்வேல், மாஸ்டர் சேகர், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாக கூறப்படும் இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. > படத்தின் விமர்சனத்தை வாசிக்க: வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT