Published : 24 Aug 2024 04:58 PM
Last Updated : 24 Aug 2024 04:58 PM

‘தங்கலான்’ ஆக.30-ல் இந்தியில் ரிலீஸ் - வட மாநிலங்களில் வெளியீடு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி இந்தியில், வட மாநிலங்களில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் வெளியானது. ஜி.வி.பிரகாஷின் இசை ரசிகர்களை கவர்ந்தது. பா.ரஞ்சித் காட்சிப்படுத்தி இருந்த மாய யதார்த்தவாதம் (Magical Realism) புதிய திரை அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். அதேசமயம் படத்தை முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்ற கருத்துகளும் பார்வையாளர்கள் தரப்பில் வெளியாகின. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் ரூ.70 -100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

இதுவரை ரூ.75 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. முன்னதாக பா.ரஞ்சித் அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வட மாநில பகுதிகளில் இருக்கும் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் அங்கே வெளியாகாத நிலையிலும், அவர்கள் காட்டும் அன்பு பூரிப்படையச் செய்கிறது” என தெரிவித்திருந்தார். அந்த வகையில் படத்தை இந்தியில் வட மாநிலங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ‘தங்கலான்’ வட மாநிலங்களில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வசூலும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் பரவலாக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x