Published : 23 Aug 2024 07:46 PM
Last Updated : 23 Aug 2024 07:46 PM

“சூரி, வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல...” - இயக்குநர் பாலா

சென்னை: “சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்” என இயக்குநர் பாலா, ‘கொட்டுக்காளி’ படத்தை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். இயக்குநர் வினோத்ராஜ். குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள். காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர் சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். ‘கொட்டுக்காளி’ படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” என பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x