Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM
அகிலா கிஷோர்.. மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இன்னொரு நடிகை. கன்னடத்தில் வெளியான ‘பதே பதே’ படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்றவரை இங்கே தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகியாக்கினார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
‘‘கன்னடத்தில் என் 2-வது படம் ‘காலபைரவா’ விரைவில் ரிலீஸாக இருக்கிறதால, அங்கே புரமோஷன் வேலை, இங்கே கதைத் தேர்வுனு மாறி மாறி பறந்துட்டிருக்கேன். இப்போதைக்கு பெங்களூர் டு சென்னை அதிகம் பயணிக்கும் பயணி நான்தான்’’ சிரிப்பை சில்லறையாக சிதறவிடுகிறார் அகிலா கிஷோர்.
பிரண்ட்ஸ் கொளுத்திப்போட்ட திரி
கணினித் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற கையோடு சினிமா துறைக்கு வந்துட்டேன். ‘இவ்ளோ உயரமா இருக்கே.. மாடலிங் பண்ணலாமே’ என்று பிரண்ட்ஸ் விளையாட்டாய் கொளுத்திப் போட்ட திரி.. கொஞ்சம் கொஞ்சமாய் படர்ந்து இன்று முழு நேர நடிகையாக்கிவிட்டது. தமிழில் சினிமா உருவாக்குவது ரொம்ப வித்தியாசம். எந்த ஒரு விஷயத்தையும் வேகமா எடுத்து முடிப்பதை ஸ்டைலாவே வச்சிருக்காங்க. ரொம்ப பிடிச்ச விஷயம் என்னை சொந்த ஊர் பொண்ணு மாதிரி கவனிச்சுக்கறாங்க. இனி, எப்பவுமே மிஸ் பண்ண விரும்பாத ஊர் இது.
கதை கேட்கவே இல்லை
மாடலிங், சினிமா இரண்டிலும் நம்பிக்கைதான் முக்கியம். ஒரு படத்தைத் தேர்வு செய்வதற்கான வழியை மாடலிங் அனுபவம் ஏற்படுத்திக் கொடுத்தாலும் படத்தில் நிச்சயம் நம் உழைப்பு நிறையவே இருக்கணும். அப்பதான் சாதிக்க முடியும். பார்த்திபன் சாரோட படத்துலகூட எமோஷன், அழுகை, சந்தோஷம், மவுனம் எல்லாத்தயும் காட்ட நிறைய வாய்ப்பு இருந்தது. இத்தனைக்கும் கதையே கேட்காமல் ஒப்புக்கொண்ட படம் அது. ஒரு படத்துல இரண்டு மூன்று காட்சிகள் என்றாலும் ரசிகர்கள் மனதை சுண்டியிழுக்கும் கேரக்டர் அமைஞ்சா போதும். அப்படி கேரக்டர்கள் அமைஞ்சுட்டா, யாரும் அசைக்கமுடியாது. ‘‘நீ இந்த அளவுக்கு நடிப்பியா? வீட்டில் உன்னை இப்படி எல்லாம் பார்த்ததே இல்லையே’’ என்று அப்பாவே ஆச்சர்யப்பட்டார். அந்த சந்தோஷம் போதும்.
உன் ஆசை.. உன் கனவு
பள்ளி, கல்லூரி நாட்களில் கூடைப்பந்து அணியின் வைஸ் கேப்டனா இருந்திருக்கேன். அந்த விளையாட்டு மட்டும் அவ்ளோ இஷ்டம். இப்பவும் வீட்டு பக்கத்துல உள்ள மினி கிரவுண்டுல குட்டிப் பசங்களோட விளையாடுறேன்.
பெங்களூர்ல அதிகபட்சம் 18 டிகிரி செல்சியஸ் தான் வெயில் இருக்கும். இங்கு வெயில் பின்னி எடுக்குது. காலை 6 மணிக்கெல்லாம் ஊரே பிஸியாகிடுது. கடைகள் திறந்துடறாங்க. ஸ்லோகம் பாடிட்டே கோயிலுக்கு போக ஆரம்பிச்சுடுறாங்க. இதெல்லாம் புதுசா இருக்கு.
என் வீடு டாக்டர், இன்ஜினீயர்னு நிரம்பியிருக்கிற வீடு. முதல்முறையாக நான் மாடலிங் துறைக்கு வந்ததே பெரிய விஷயம். நடிக்க வந்தது அதைவிட பெரிய விஷயம். ‘படிப்பை சமத்தா முடி. அப்புறம், உன் ஆசை.. உன் கனவு’ என்று வீட்டுல பச்சைக்கொடி காட்டிட்டாங்க. நம்ம கேரியரை நாமே நகர்த்திட்டுப் போறதுல ஒரு த்ரில் அனுபவம் இருக்கத்தான் செய்யுது.
பீச் பிரியை
ஷாப்பிங் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஷாப்பிங் மாலில் அம்மா மூணு கடைக்கு மேல சுத்தினாலே, அவங்க கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிடுவேன். பெங்களூர்ல 3 ஜிம் இருக்கு. அங்கு கொஞ்சம் நேரம் செலவழிப்பேன். ஜங்க் ஃபுட்ல பெரிசா விருப்பம் இல்ல. பாரம்பரிய உணவுதான் ஆரோக்கியம்னு நம்புறவ நான்.
தம்பி ஆதித்யா கிடாரிஸ்ட். அவன் வாசிக்கும்போது பாடுறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். இப்போ சென்னைன்னா ரொம்ப இஷ்டம். பெங்களூர்ல பீச் கிடையாது. இங்கு வர்ற ஒவ்வொரு முறையும் பீச் போகாம இருந்ததே இல்ல. அதுவும் பட்டினப்பாக்கம் பீச்.. வாவ்! அங்கு வசிக்கும் மீனவர்களோட வாழ்க்கை முறை ரொம்பவே வித்தியாசமா இருக்கு.
இன்னொரு புதுப் பழக்கம்.. மாடலிங்ல இருந்து சினிமாவுக்கு வந்ததால இப்போ சினிமா அதிகம் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். இங்கே அஜித்தின் தீவிர ரசிகை நான்.
அவர்கூட நடிக்க வாய்ப்பு அமைந்தால் நான் ரொம்ப லக்கி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT