Published : 17 Aug 2024 04:28 AM
Last Updated : 17 Aug 2024 04:28 AM
புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார். சிறந்த படமாக ‘ஆட்டம்’ என்ற மலையாள படமும் சிறந்த பொழுதுபோக்கு படமாக‘காந்தாரா’ வும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கும், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ என்ற குஜராத்திப் படத்தில் நடித்தமானசி பரேக்கிற்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
துணை நடிகைக்கான விருது ‘உன்சாய்’ என்ற இந்திப் படத்தில் நடித்த நீனா குப்தாவுக்கும், துணை நடிகர் விருது, ‘சவுஜா’ என்ற ஹரியான்வி மொழி படத்தில் நடித்த பவன் ராஜ் மல்ஹோத்ராவுக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.‘உன்சாய்’ படத்தை இயக்கிய சூரஜ் பர்ஜத்யாவுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ படம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில், சிறந்த தமிழ் திரைப்படம், படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்காக ரவிவர்மன், ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என 4விருதுகள் கிடைத்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது 7-வது தேசிய விருது ஆகும். தேசிய விருதுகளை அதிகம் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த இசை அமைப்பாளர் (பாடல்கள்) விருதை பிரம்மாஸ்திரா படத்துக்காக பிரீத்தம் பெறுகிறார். சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கும் சிறந்த நடனத்துக்கான விருது, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர்கள் ஜானி- சதீஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி பாடகிக்கான விருது, மலையாளத்தில் வெளியான ‘சவுதி வெள்ளக்கா’ படத்துக்காக, பாம்பே ஜெயஸ்ரீக்கும், சிறந்த பாடகருக்கான விருது ‘பிரம்மாஸ்திரா’ என்ற இந்திப் படத்தில் பாடிய அர்ஜித் சிங்குக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதைக்கான விருது ‘ஆட்டம்’ என்ற மலையாளப் படத்துக்காக ஆனந்த் ஏகார்ஷிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது ‘மாளிகபுரம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த ஸ்ரீபத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்தியில் சிறந்த படமாக ‘குல்மோஹர்’, மலையாளத்தில் சிறந்த படமாக ‘சவுதி வெள்ளக்கா’, தெலுங்கில் சிறந்த படமாக ‘கார்த்திகேயா 2’, கன்னடத்தில் சிறந்த படமாக ‘கே.ஜி.எஃப்-2’ ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் வாழ்த்து: நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக நடித்தநித்யா மேனன் தேசிய விருதை வென்றது எனக்கு தனிப்பட்ட வெற்றி. ஜானி, சதீஷ் மாஸ்டர்களுக்கும் வாழ்த்துகள். திருச்சிற்றம்பலம் குழுவுக்கு இது ஒரு சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார்.
விருது குறித்து ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்துக்காக இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இயக்குநர் மணிரத்னம் மற்றும் படக்குழுவுக்கு நன்றி.
இதில் பணியாற்றிய அனைவரும் கடுமையான உழைப்பை கொடுத்தார்கள். அதற்கான அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT