Published : 16 Aug 2024 11:54 PM
Last Updated : 16 Aug 2024 11:54 PM

7-வது முறையாக தேசிய விருது: இந்திய இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடம்

சென்னை: ‘பொன்னியின் செல்வன் -1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக முறை தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்களில் முதலிடம் பிடித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

70-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்த விருதுகளில், சிறந்த தமிழ் திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்வாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் டிசைன் என மொத்தம் 4 விருதுகளை ‘பொன்னியின் செல்வன் 1’ வென்றுள்ளது.

இந்த சூழலில், இந்த விருதுடன் சேர்த்து இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான முதல் தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’, 2001-ல் வெளியான ‘லகான், 2002-ல் வெளியான ’கன்னத்தில் முத்தமிட்டால்’, 2017-ல் வெளியான ‘காற்று வெளியிடை’ ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது. இந்தியில் 2017ல் வெளியான ‘மாம்’ மற்றும் தற்போது பொன்னியின் செல்வனுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது என மொத்தம் இதுவரை ஏழு விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அளவில் அதிக தேசிய விருதுகள் வாங்கிய இசைமையமைப்பாளர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். இளையராஜா ஐந்து தேசிய விருதுகளும், விஷால் பரத்வாஜ் 3 ஜெய்தேவ் 2, கே.வி.மகாதேவன் 2 தேசிய விருதுகளும் வென்றுள்ளனர். தமிழில் லால்குடி ஜெயராமன், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், டி.இமான் ஆகியோர் தலா ஒரு தேசிய விருது வென்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x