Published : 12 Aug 2024 08:01 AM
Last Updated : 12 Aug 2024 08:01 AM

மாயாவதி: மருதகாசி பாடலாசிரியராக அறிமுகமான படம்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளம், மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் அதிபர் டி.ஆர்.சுந்தரம், 30 வருடங்களுக்குள் 100 படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தவர். அவரது 100-வது தயாரிப்பான ‘கொஞ்சும் குமரி’யை 1963-ம் ஆண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது காலமானார். அந்தப் படத்தில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளையும் தனி ரீலாக சேர்த்திருந்தார்கள்.

வருடத்துக்கு 3 படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது டி.ஆர்.சுந்தரத்தின் விருப்பம். இதனாலேயே தனது ஸ்டூடியோவில் ரெடிமேட் அரங்குகளை அமைத்திருந்தார். அதைச் சிறிதாக மாற்றினால் போதும். மற்றப் படங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் அவர் அறியப்பட்டாலும் கணபதி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரிலும் படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று, ‘மாயாவதி’.

பெரியாரின் ஆரம்பகால சீடர்களில் ஒருவரான ஜலகண்டபுரம் பா.கண்ணன் இதன் கதையை எழுதினார். டி.ஆர்.மகாலிங்கம், அஞ்சலி தேவி, எஸ்.வி.சுப்பையா, காளி என்.ரத்தினம், எம்.ஜி.சக்கரபாணி, சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி உட்பட பலர் நடித்தனர். லலிதா- பத்மினி ஆடியிருந்தனர். ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்துக்கு மருதகாசி, கா.மு.ஷெரீப் பாடல்கள் எழுதினர்.

இதில் இடம்பெறும் ‘பெண்ணெனும் மாயப் பேயாம் பொய் மாதரை என் மனம்’ என்ற பாடல் மூலம்தான் மருதகாசி திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார். அந்தப் பாடல் வரவேற்பைப் பெற்றது.

மாயாவதி என்ற இளவரசியைப் பற்றிய நாட்டுப்புறக் கதையின் அடிப்படையில் உருவான படம் இது. பெண்களை வெறுக்கும் இளவரசனைக் காதலிக்கிறார், நாயகி. காதலை ஏற்க மறுக்கிறார், இளவரசன். சிகை அலங்கார கலைஞர் ஒருவரும் இளவரசியின் மனதில் இடம் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் இளவரசனை, நாயகி எப்படி கரம் பிடித்தார் என்பது கதை.

டி.ஆர்.மகாலிங்கம் மற்றும் அஞ்சலி தேவிக்கு இடையிலான காதல் காட்சிகள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக அப்போது விமர்சிக்கப்பட்டன. தணிக்கைக் குழு அதற்கு சில ‘கட்’களை கொடுத்தது.

1949-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தில், ‘தைரியமான’ காதல் காட்சிகள், ரசனையான நடன அமைப்புகள், இனிமையான பாடல்கள் இருந்தாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x