Published : 11 Aug 2024 09:59 AM
Last Updated : 11 Aug 2024 09:59 AM

திரை விமர்சனம்: மின்மினி

ஊட்டியில் ஒரு கான்வென்ட் பள்ளியில் கால்பந்து சாம்பியனாகவும் கொண்டாடப்படுபவனாகவும் திகழ்கிறான் பாரி (கவுரவ் காளை}. அதே பள்ளியில் படிக்கும் சபரி (பிரவீன் கிஷோர்) ஓவியம், செஸ் என கலைத் திறன்களில் சிறந்து விளங்குகிறான். சபரியை வம்புக்கிழுத்துக் வெறுப்பேற்றுகிறான் பாரி. ஒரு கட்டத்தில் இருவருக்கும் நட்பு உருவாகிறது. அதை வெளிப்படுத்தும் முன், விபத்தில் மூளைச் சாவு அடைகிறான் பாரி.

அவனின் இதயம் பொருத்தப்படுவதால் உயிர் பிழைக்கும் பிரவீனா (எஸ்தர் அனில்), பாரி படித்த அதே பள்ளியில் சேர்ந்து அவனின் மரணத்தால் துயரத்தில் உழலும் சபரிக்கு உதவ முயல்கிறாள். ஆனால் சபரி, பள்ளியை விட்டு சென்று விடுகிறான். பல ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் பைக் பயணம் செய்து கொண்டிருக்கும் சபரியை பின்தொடர்கிறாள் பிரவீனா. இந்தப் பயணத்தில் இருவருக்கும் நேரும் அனுபவங்கள்தான் மீதிக் கதை.

ஆழமான மனித உணர்வுகளை அழகாகக் கடத்தும்திறமைப் படைத்தவர் இயக்குநர் ஹலிதா ஷமீம்.‘சில்லு கருப்பட்டி'க்குப் பிறகு இதிலும் அதை நிரூபித்திருக்கிறார். ஒட்டுமொத்த படமும் குளிர்பிரதேசங்களில் நிகழ்வது இனிமையான காட்சி அனுபவம். ஊட்டியின் குளுமையையும், இமயமலை பகுதிகளின் பிரம்மாண்டத்தையும் உணரச் செய்யும் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். படத்தின் தயாரிப்பாளரும் இவரே.

2 பதின்பருவச் சிறுவர்களுக்கு இடையிலான பிணக்கு, சொல்லிக் கொள்ளப்படாத நட்பாக முகிழும் தொடக்கக் காட்சிகள் இதமாக இருக்கின்றன. பிறகு சற்றே தடுமாறும் திரைக்கதை இடைவேளையில் அழுத்தமாக நிலை கொள்கிறது. இமயமலையின் உயரமான பகுதிகளில் சபரியும் பிரவீனாவும் மேற்கொள்ளும் பயணம், அவர்களுக்கிடையில் இணக்கம் உருவாவது, அங்கு கிடைக்கும் அனுபவங்கள், தமிழ் சினிமா பார்வையாளர்களுக்குப் புதியவை.

இந்த அனுபவங்கள் ரசிக்கத்தக்கவையாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தமான சம்பவங்கள் இல்லாததால் ஒரு கட்டத்துக்கு மேல் திரையில் இருந்து கவனம் சிதறுவதைத் தவிர்க்க முடியவில்லை. காட்சிகள் நிதானமாக நகர்வதும் காரணம்.

தனித்துப் பயணிக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, காதலும் பாலின கவர்ச்சியும் மட்டுமே இருக்கமுடியும் என்கிற எழுதப்படாத விதியை உடைத்து கண்ணியமான உறவாக சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது. பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இரண்டாம் பாதியில் பெண்களின் அக உணர்வுகளை அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் ஹலிதா.

படம் தொடங்கும் போது பதின் பருவச் சிறுவர்களாக இருந்தவர்கள் வளர்ந்த பிறகு இரண்டாம் பாதி படமாக்கப்பட்டிருப்பது, கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

முதல் அரைமணி நேரம் மட்டுமே வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் கவுரவ் காளை. பிரவீன் கிஷோர்,எஸ்தர் அனில் இருவரும் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். துணை நடிகர்கள் குறையற்றப் பங்களிப்பைத் தந்துள்ளனர். கதிஜா ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் ‘இசைப்புயல்’ வீட்டிலிருந்து இன்னொரு புயலின் வருகையை அறிவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

வன்முறை, வெட்டுக்குத்து என்று பயணிக்கும் தமிழ் சினிமாவில் மனித உணர்வுகளையும் வாழ்வின் மகத்துவத்தையும் அழுத்தமாகப் பேசும் ‘மின்மினி’யை, குறைகள் மறந்து வரவேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x