Published : 25 Aug 2014 12:48 PM
Last Updated : 25 Aug 2014 12:48 PM

என்னடா எந்திருச்சு வந்துட்டான்னு நினைக்கிறாங்க: இயக்குநர் பார்த்திபன் ஓபன் டாக்

`'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தோட வெற்றி, வாழ்த்து குவியல் ஆகியவற்றை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு வீதி இறங்கி திருட்டி வி.சி.டிக்கு எதிராக போராடி வருகிறார் இயக்குநர் பார்த்திபன்.

அவரிடம் பேசியதில் இருந்து..

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து என்ன நினைச்சீங்க?

அழுகுற அளவிற்கு பீல் பண்ணினேன். ஜனங்க தியேட்டர்ல படத்தை எப்படி ரசிக்கிறாங்கனு பார்க்க ஒரு வாரம் ஆயிடுச்சு. எஸ்கேப் தியேட்டர்ல நேற்று தான் போய் பார்த்தேன். முன்னாடி எல்லாம் போய் பார்க்குறப்போ, பார்த்தா சிரிப்பாங்க அவ்வளவு தான். நேற்று இடைவேளையின் போது எல்லா பெண்களும் என்னைப் பாத்துட்டு கத்துறாங்க. ஆர்யாவை பார்த்து எப்படி கத்துவாங்களோ அப்படி கத்தினாங்க. அதை அந்த கதையோட வெற்றியாக தான் பார்க்கிறேன். மக்களோட ரசனை மாறியிருப்பதற்கான வெற்றி. இப்பல்லாம் சந்தோஷம் என்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்தப் படத்தை நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப் போறேன். நிறைய பரிசுகளை தள்ளிட்டு வரும் அப்படிங்கிறது இப்போதைய கனவு.

இதோட தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?

படத்தோட பெயர் 'உப்புமா கம்பெனி'. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தோட பார்ட் 2-ஆக இயக்க தீர்மானித்திருக்கிறேன். இப்போதைக்கு தலைப்பு மட்டும் முடிவாகி இருக்கிறது. இன்னும் கதை எதுவுமே நான் தீர்மானிக்கவில்லை.

'அஞ்சான்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் நமது படத்தை வெளியிடலாம் என்று எதை நம்பி முடிவு செய்தீர்கள்?

பல சமயம் எனது உதவியாளர்கள்கிட்ட பேசும் போது, நமக்கு ஓ.கே சார் ரசிகர்கள் இதை ரசிப்பாங்களானு கேட்பாங்க. அதாவது இவங்களை விட ரசிகர்கள் மட்டமானவங்க முட்டாள்னு முடிவு பண்ணிப்பாங்க. நான் என்ன முடிவு பண்ணுவேன்னா நானும், ரசிகனும் ஒண்ணு தான். என்னை மாதிரி தான் ரசிகர்களும் அப்டேட் ஆயிட்டே இருக்காங்கனு நினைக்கிறேன். என்ன தான் 'அஞ்சான்' வந்தால் கூட, என்னை மாதிரியான ரசிகர்கள் 'கோலி சோடா' மாதிரியான படத்துக்கு போவோம். அதோட சதவீதம் ரொம்ப கம்மி. புதிய முயற்சிகள் எங்கேயாவது வந்துச்சுன்னா தேடிப்போய் பார்ப்போம். 'அஞ்சான்' போனோம் டிக்கெட் கிடைக்கலைனு ஒரு கூட்டம் இருக்கு. 'அஞ்சான்'க்கு போனா கூட்டம் ஜாஸ்தியா இருக்குமோ அப்படினு நினைக்கிற ஒரு கூட்டம் இருக்கு. இப்படி 5, 5% சேர்ந்தாலே 30% வந்துரும். 3 நாட்களுக்கு இவ்வளவு தான் வருவாங்கனு எனக்கு தெரியும்.

இதைவிட கொடுமை ஐநாக்ஸ், சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் எனக்கு ஒரு ஷோ தான் கொடுத்தாங்க. ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கில் கேட்டேன். "எப்படி.. நீங்க தியேட்டர நிரப்புவீங்க"னு அதோட முதலாளி சொன்னார். அதை எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்? எனக்கு இந்தப்படம் நிரப்பும் அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது. முதல்ல கமலா தியேட்டர்ல எனக்கு ஒரு ஷோ கொடுங்கனு கேட்டேன். அப்போ கொடுக்கல. இப்போ தியேட்டரே கொடுத்திருக்காங்க. மாயாஜால் தியேட்டர்ல முதல்ல 4 ஷோ இருந்தது, இப்போ 27 ஷோ ஓடுது.

படத்துல விஷயம் இருக்குதா இல்லயா.. அது தான் முக்கியம். என்னுடைய கதையில் எனக்கு யாருமே செய்யாத முயற்சினு ஒரு நம்பிக்கை இருந்தது. என்கிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் "100% ரிஸ்க்கான கதை. ரசிகர்கள்கிட்ட கொடுத்து ஜெயிச்சுருக்கீங்க"னு சொன்னார். எனக்கு 25 வருஷமா என் மீதான நம்பிக்கை அப்படியே தான் இருக்கு. 'அபூர்வ சகோதரர்கள்' வரும்போது தான் என்னுடைய 'புதிய பாதை' படத்தை ரிலீஸ் பண்ணினேன். தைரியமா ரிலீஸ் பண்ணினேன். மக்கள் எனக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

இந்தளவிற்கு வரவேற்பு 'புதிய பாதை' படத்திற்கு கிடைத்ததா?

'புதிய பாதை' ரிலீஸ் பண்ணும் போது எல்லாம் இந்தளவிற்கு டாக் இல்லை. ஏன்னா, இப்போ என் மீது உள்ள ப்ளஸ்ஸை விட மைனஸ் ஜாஸ்தி. இதுக்கு முன்னாடி 'குடைக்குள் மழை'னு ஒரு சொன்னாருப்பா, புரியல அப்படினு ஒரு கூட்டம் இருக்கும். அவருக்கு என்னங்க, யாருக்குமே புரியாத மாதிரி ஒரு படம் எடுத்துட்டு இருப்பார்னு சொல்லுவாங்க. இந்த படம் ரிலீஸூக்கு முன்னாடி கூட பேசுனவங்க இருக்காங்க. இப்பக்கூட ஏ, பி, சி சென்டர்களைப் பொறுத்தவரை, சி சென்டர்களில் இந்தப் படம் புரியல. க்ளைமேக்ஸ்ல ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டார்னு சொல்றாங்க.

ரசிகர்களும் அடுத்த கட்டத்திற்கு போயிருக்காங்க. இன்றைக்கு இருக்குற இளைஞர்கள் என்னை தலைல தூக்கி வைச்சுட்டு கொண்டாடுகிறார்கள்.

எப்போதுமே தனிமையில் இருக்கீங்க. எப்படி இந்தளவிற்கு ஒரு கதை பண்ணி பெரிசா திரும்பவும் வரணும் முடிவு பண்ணீங்க?

தனிமைக்குள் தள்ளப்பட்ட உடனே, என்னை நேசிப்பது நான் மட்டும் தான் அப்படினு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு யாருமே இல்ல. நான் மட்டும் தான். நான் சொல்றது சினிமா உலகத்தில் கூட. இப்போ கூட, சினிமா உலகில் என்னை எல்லாரும் இப்போ பாராட்டுறாங்கன்னா அதற்கு பின்னாடி ஒரு பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. செத்துப் போயிட்டான்னு நினைச்சோம். என்னடா எந்திருச்சு வந்துட்டான்னு நினைக்கிறாங்க. நான் மட்டும் தான், நான் உயிரோட இருக்கேன்னு நினைச்சேன். மற்றவங்க எல்லாரும், இவன் அவ்வளவு தான் இவன் காலினு நினைச்சுட்டாங்க. இப்போ நான் உயிரோடு வந்த உடனே, அவங்களுக்கு பெரிய ஷாக்காக இருக்கிறது. இவங்க ஷாக்காகிறதை பார்த்தால், எனக்கு பயமா இருக்கு.

'குறும்படம் எடுக்குற குரங்கு பசங்களா..'னு வசனம் வைத்து குறும்பட இயக்குநர்களை சாடியிருப்பதற்கு என்ன காரணம்?

58 வயசு கிழவனுக்கு, இப்போ உள்ள இயக்குநர்கள் மீது பொறாமை, அதனால் தான் 'குறும்படம் எடுக்குற குரங்கு பசங்களா'னு அவரோட பார்வையில் இருந்து தான் அந்த வசனத்தை வைத்தேன். என்னுடைய பார்வையில் கிடையாது. கார்த்திக் சுப்புராஜ் படத்தை பாராட்டிவிட்டு, அவரோட வருத்தத்தை கூட சொன்னார். 'பீட்சா'வுக்கு முன்னால கார்த்தி சுப்புராஜை பாராட்டிய முதல் நாள் நான் தான். இந்த 'ஜிகர்தண்டா' கதை நான் நடிக்க வேண்டியது. சிம்ஹா ரோல் நான் நடிக்க வேண்டியது, வேறு வேறு காரணங்களால் அவர் 'பீட்சா' படம் பண்ணினார். குறும்படம் பண்ணிட்டு, படம் இயக்குற இளம் இயக்குநர்கள் மேலே எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு.

இந்தப் படத்திற்கு திரையுலகில் இருந்து கிடைத்த வரவேற்பு என்ன? விஜய் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வலம் வருதே..

அது தெரியல. விஜய் வாழ்த்து சொல்லுவார்னு நம்புறேன். இயக்குநர் மணிரத்னம் "பெரிசா சாதிச்சுட்டீங்க. இந்த இளைஞர்களை கையில பிடிக்கிறது பெரிய விஷயம். அதை நீங்க பண்ணிட்டீங்க"ன்னார். இயக்குநர் பாரதிராஜா "25 வருஷத்தை ஒரே படத்துல தாண்டியிருக்க. அடுத்த 25 வருஷத்துக்கு இந்த ஒரு படம் போதுமானது", இயக்குநர் பாக்யராஜ் "படம் பாத்துட்டு பேசுவேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் எழுதிக் கொடுக்கிறேன்", இயக்குநர் நலன் குமாரசாமி "உங்களைத் தொட இன்னும் 10 வருஷம் ஆகும் போலயே. இப்படியே போயிட்டு இருந்தீங்கன்னா நான் எப்போ உங்களைத் தொடுவேன்", இயக்குநர் சாந்தகுமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படி பலர் அவங்களோட வாழ்த்தை தெரிவிச்சாங்க.

தினமும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. ஒரு பெண்ணிற்கு அப்பாவாக உங்களுடைய பார்வை என்பது என்ன?

அழுகை தான் வருது. 3 வயசு குழந்தையை ஒருத்தன் ரேப் பண்றான். அவனுக்கு அந்த எண்ணம் எப்படி தோணும்? ஒரு குழந்தையைப் பார்த்தால் குழந்தையாக தான் தோணனும். பெண்ணைப் பெற்றிருக்கிறேன் என்பதால் மட்டுமே இதை நான் சொல்லவில்லை. என்னோட பெண் ரொம்ப தைரியமானவர். அவங்களுக்கு நான் ரொம்ப சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். இரவு 7 மணி ஆச்சுன்னாலே "எங்கம்மா இருக்கே?"னு போன் பண்ணுவேன். அதுவும் பேப்பரைப் பார்க்க பார்க்க பயம் இன்னும் அதிகமாகிட்டே போகுது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x