Published : 07 Aug 2024 07:05 AM
Last Updated : 07 Aug 2024 07:05 AM
இந்தியில் ஹிட்டான ‘அந்தாதுன்' படத்தை ‘அந்தகன்' ஆக்கியிருக்கிறார், நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
"இந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைச்சிருக்கார். ஒவ்வொரு காட்சி முடிஞ்சதும் அடுத்தது என்னங்கற பரபரப்பு, சென்டிமென்ட், சஸ்பென்ஸ்னு படம் வேகமா போகும். ஏற்கெனவே வெற்றி பெற்ற படம் அப்படிங்கறதால தமிழுக்காக பெரிய மாற்றங்கள் பண்ணல, அது தேவையுமில்லை. அதனால சின்ன மாற்றங்களை மட்டும் பண்ணியிருக்கேன். கண்டிப்பா ரசிகர்களுக்கு புது உணர்வை இந்தப் படம் கொடுக்கும்" என்கிறார் தியாகராஜன்.
படத்துல ஹீரோ பார்வையற்ற பியோனா இசைக் கலைஞரா வர்றார். பிரசாந்த் அதுக்கு ஏதும் பயிற்சி எடுத்தாரா?
அவருக்கு பியானோ நல்லா வாசிக்கத் தெரியும். படத்துல பியானோ இசையை கம்போஸ் பண்ணினது, லிடியன் நாதஸ்வரம். ஆனா, அதை நிஜமாகவே வாசிச்சது பிரசாந்த். அதனால அந்த காட்சிகள் நடிப்பா இல்லாம, இயல்பா இருக்கிற மாதிரி தெரியும். அதே போல சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் பாராட்டற மாதிரி இருக்கும்.
படத்துல நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே?
இந்தியில இந்தப் படத்தைப் பார்க்கும் போதே, ஆயுஷ்மான் குராணா, தபு தவிர மத்தவங்க அதிகம் தெரியாதவங்கதான். ஆனா, இதுல எல்லா கேரக்டர்கள்லயும் முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினேன். பிரசாந்த், பிரியா ஆனந்த் தவிர, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகிபாபு, பூவையார்னு நிறைய பேர் இந்தக் கதைக்குள்ள வந்ததும் படம் பிரம்மாண்டமா மாறுச்சு. கதைக்கு வலு சேர்க்கறதாகவும் இவங்க நடிப்பு இருக்கும்.
இந்தியில தபு நடிச்ச கேரக்டர் முக்கியமானது. அவங்களையே தமிழ்லயும் நடிக்க வச்சிருக்கலாமே?
வச்சிருக்கலாம். ஆனா, மொழி புரியாம நடிக்கும்போது, உணர்வுகளை சரியா வெளிப்படுத்த முடியுமான்னு எனக்குத் தெரியல. அதனால, அந்த கேரக்டர்ல சிம்ரனை நடிக்க வச்சிருக்கோம். சிம்ரன் நடிப்பு பற்றி சொல்லித் தெரியவேண்டாம். ஒரிஜினலை விட இதுல சிம்ரன் நடிப்பு வேற மாதிரி இருக்கும். அதே போலதான் சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் உட்பட மற்ற நடிகர், நடிகைகளோட நடிப்பும்.
இளையராஜா பாடல்களை பயன்படுத்தி இருக்கீங்கன்னு சொல்றாங்களே?
ஆமா. நவரச நாயகன் கார்த்திக், இதுல நடிகராகவே வர்றார். அதனால, இளையராஜா இசையில அவர் நடிச்ச படங்கள்ல இருந்து 3 பாடல்களை பயன்படுத்தி இருக்கோம். அதுக்கு முறையா அனுமதி வாங்கினோம். அதேபோல 'அமரன்' படத்துல இருந்து ‘சந்திரனே சூரியனே’ பாடலையும் பயன்படுத்தி இருக்கோம். அதுக்கு இசை அமைப்பாளர் ஆதித்யன் கிட்ட அனுமதி வாங்கினோம். அந்தக் காட்சிகள் படத்துல ரசனையா இருக்கும். ரசிகர்களுக்கு பழைய ஞாபகங்களை கொண்டு வரும்.
ரவி யாதவ் தமிழ்ல படம் பண்ணி ரொம்ப வருஷமாச்சு. அவரை மீண்டும் அழைச்சுட்டு வந்திருக்கீங்க…
அவர் முக்கியமான ஒளிப்பதிவாளர். பிரசாந்த் நடிச்ச செம்பருத்தி, காதல் கவிதை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். பிறகு இந்திக்கு போயிட்டார். அங்க நிறைய படங்கள் பண்ணியிருக்கார். இப்பவும் முன்னணி ஒளிப்பதிவாளரா இருக்கார். இந்தப் படத்துக்கு அவர் ஒளிப்பதிவு பண்ணினா நல்லாயிருக்கும்னு நினைச்சு கூப்பிட்டேன். வந்துட்டார். நான் பெருமைக்காக சொல்லல, இதுல அவரோட விஷுவல் நிச்சயம் மிரட்டலா இருக்கும்.
‘அந்தாதுனு'க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடிச்சீங்க?
அந்தாதுன் அப்படின்னா இந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதுல சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT