Published : 06 Aug 2024 12:23 AM
Last Updated : 06 Aug 2024 12:23 AM

“அம்பேத்கர் இல்லையென்றால் நான் இல்லை” - பா.ரஞ்சித் நெகிழ்ச்சி @ ‘தங்கலான்’ நிகழ்வு

சென்னை: “என்னுடைய அரசியல்தான் நான். அது இல்லை என்றால் நான் இல்லை. பாபாசாஹேப் அம்பேத்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இல்லையென்றால் நான் இங்கே இல்லவே இல்லை” என்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “இந்த படம் ஆரம்பிக்கும்போது ஞானவேல் ராஜாவுக்கு இருந்த பிரச்சினை குறித்து நிறைய பேர் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் நான் அவருடன் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தை நான் நினைத்தபடி எடுக்க எந்த சமரசமும் இல்லாமல் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார். நான் கமர்ஷியல் படங்களை பார்த்து சினிமாவுக்குள் வரவில்லை. கல்லூரி காலங்களில் நான் பார்த்த உலக திரைப்படங்கள்தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறு எப்போதும் ஒருபக்க சார்புடனே இருக்கிறது. அது எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பேசவே இல்லை. அந்த வரலாற்றை என்னுடைய திரைப்படங்களின் மூலம் நான் தேடுகிறேன்.

நாம் நினைக்கும் கருத்துகளை எடுத்துவிடலாம் என்றுதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால் சினிமா மிகவும் வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமா. இங்கே நாம் நினைக்கும் விஷயத்தை அப்படியே சொல்லமுடியுமா என்ற பயம் வந்தது. அந்த பயத்தை முதன்முதலில் போக்கியது என்னுடைய இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்கு இது போன்ற எந்த ஐடியாவும் இல்லாமலேயே ‘சென்னை 28’ என்ற படத்தின் மூலம் சென்னையை பற்றி பதிவு செய்திருப்பார்.

ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் சொல்லும்போது பார்வையாளர்களுடன் நம்மால் சுலபமாக நெருங்கமுடியும் என்பதை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். இதனால் நான் ஏற்கெனவே எழுதிய கதைகளை விட்டுவிட்டு ‘அட்டக்கத்தி’ என்ற கதையை எழுதினேன்.

என்னுடைய அடுத்த படத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தான் எடுக்கிறேன் என்று ஞானவேல்ராஜா, கார்த்தி ஆகியோரிடம் சொல்லிவிட்டே ஆரம்பித்தேன். அப்படித்தான் ‘மெட்ராஸ்’ உருவானது. அந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் ரஜினிகாந்த் எனக்கு ‘கபாலி’ வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு என்னுடைய அரசியல் ரொம்ப பிடிக்கும்.

‘சார்பட்டா’ படத்துக்குப் பிறகு நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று விக்ரம் சொன்னார். சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான ஒன்று அல்ல.

இந்த கதையை விக்ரம் ஒப்புக்கொண்ட பிறகு தான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் ஆரம்பித்தது. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே நான் எதிர்பார்த்த தங்கலானாக வந்து நின்று அனைத்தையும் அவர் சுலபமாக்கி விட்டார். சில காட்சிகளை ரீஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது கூட தயங்கமால் சம்மதித்தார்.

விக்ரம் போன்ற ஒரு நடிகரை தேர்வு செய்தபின் அவரோடு நடிக்கக் கூடிய மற்ற நடிகர்கள் என்றதுமே முதலில் என் நினைவுக்கு வந்தது பசுபதிதான். அவரைப் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் போட்டி மனப்பான்மையுடன் நடித்திருக்கிறார்.

பார்வதியை நான் ‘பூ’ படத்திலிருந்தே பார்க்கிறேன். அவரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென்றால் அவருக்காக ஒரு கதையை எழுதவேண்டும் என்று காத்திருந்தேன். அவரிடம் இந்த கதையை சொன்னதும் உடனே ஒப்புக் கொண்டார். பார்வதி கேட்டுக் கொண்டே இருந்தார் ஏன் நான் படப்பிடிப்பில் சரியாக பேசுவதில்லை என்று. நான் இந்த படத்துக்காக கருணையற்ற மனிதனாக மாறினால்தான் இதனை எடுக்க முடியும் என்று தோன்றியது. பொதுவாக என் படங்களின் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அனைவரையும் ரொம்ப கஷ்டபடுத்தியிருக்கிறேன்.

இந்த சினிமா உங்களுடைய உணர்வுகளை தொடும் என்று நம்புகிறேன். அதன் மூலம் இந்த சினிமா பல விவாதங்களை உண்டு பண்ணும். என்னுடைய அரசியல்தான் நான். அது இல்லை என்றால் நான் இல்லை. பாபாசாஹேப் அம்பேத்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இல்லையென்றால் நான் இங்கே இல்லவே இல்லை” இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x