Published : 05 Aug 2024 05:42 AM
Last Updated : 05 Aug 2024 05:42 AM

பேச்சி - சினிமா விமர்சனம்

காயத்ரி, தேவ், ஜனா, ப்ரீத்தி, மகேஷ் ஆகிய நண்பர்கள் ‘ட்ரெக்கிங்’ செல்வதற்காகக் கொல்லிமலைக்கு வருகிறார்கள். வனக்காவலர் பால சரவணன் அவர்களுக்கு வழிகாட்டியாக வருகிறார். திடீரென, பாலசரவணின் எதிர்ப்பை மீறி, காட்டில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழையும் அவர்கள், பேச்சியிடம் சிக்குகிறார்கள். யார் அந்தப் பேச்சி? அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பது கதை.

மலையேற்றம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், சட்ட விரோதமாக ‘ட்ரெக்கிங்’ செல்வது, ஐவர் குழுவில் ஒளிப்பட ஆர்வலனாக இருக்கும் மகேஷை மற்ற இருவர், அளவுக்கு மீறிக் கிண்டல் செய்வது, வனக் காவலரின் அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்வது எனப் படத்தின் முதல் 20 நிமிடங்கள் மெல்ல நகர்ந்தாலும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததும் பேச்சிக்கும் மலையேற்றக் குழுவுக்குமான ஆடுபுலி ஆட்டம் தொடங்கி, ஒவ்வொரு காட்சியும் கதி கலங்க வைக்கிறது.

மகேஷ் கொண்டுவரும் உயர்தர கேமரா, ஏற்கெனவே ட்ரெக்கிங் வந்த இருவர் விட்டுச் சென்ற ‘கோ புரோ’ கேமரா ஆகியவற்றைத் திகில் காட்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புத்திசாலித் தனமும், வனக் காவலருக்கு அவரது மகள் கழுத்தில் மாட்டிவிடும் தாயத்தை வைத்து அமைத்துள்ள காட்சிகளும் அசத்தல்.

தடை செய்யப்பட்ட பகுதியில் இருக்கும் ஒரேயொரு ஓட்டுக்கட்டிடம், நிகழ்காலத்திலும் பிறகு பிளாஷ்பேக்கிலும் உயிர்பெற்று திரையில் விரியும்போது அதை அவ்வளவு நம்பகமாக உருவாக்கியிருக்கும் கலை இயக்குநர் குமார் கங்கப்பனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. பேய்-ஆவி என்றால், இருளே ஆக்கிரமிக்கும் என்பதை அடித்து நிரவியிருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன்.பி. படத்தின் இரண்டாம் பாதி, கடைசிக்கட்டம் வரை இதயத் துடிப்பை எகிற வைக்கிறது. பேச்சியாக வருபவரின் நடிப்பும் வயதும் எதிர்பாராத சர்ப்பிரைஸ்.

மலைக் காட்டை அழகாகவும் அமானுஷ்யத்தின் வேட்டைக் காடாகவும் இரண்டு பரிமாணங்களில் படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் பார்த்திபனின் கேமரா கோணங்கள் படத்துடன் நம்மைப் பிணைக்கிறது. எடிட்டர் இக்னேஷியஸ் அஸ்வினின் அட்டகாசமான வெட்டுகளும் ராகேஷ் முருகேசனின் பின்னணி இசையும் அபாரம்.

கதை, அதன் நகர்வு, காட்சியமைப்பு ஆகியவற்றுடன் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் கச்சிதமான கலவையில் இணைந்த ஹாரர் திரைப்படம் இது. அதை, ரத்தம், வன்முறை இல்லாமல் காட்டியிருக்கிறது ‘பேச்சி’ படக்குழு.

இதய பலகீனம் கொண்டவர்கள் எச்சரிக்கையுடன் தவிர்த்து விடுதல் நலம். மற்றவர்களுக்கு முழு திகில் அனுபவம் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x