Published : 29 Jul 2024 07:33 PM
Last Updated : 29 Jul 2024 07:33 PM

செம்பருத்தி தேநீர் நன்மைகளை பகிர்ந்த நயன்தாரா: சமந்தாவை அடுத்து மருத்துவ சர்ச்சை

சென்னை: நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மருத்துவம் குறித்த தவறான தகவல்களை வெளியிட்டதாக கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, சமந்தா ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பான சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனை எனது உணவுத் திட்டத்தில் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.

இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தரக்கூடியது என்பதால் முகப்பரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளதால் செம்பருத்தி தேநீர் மழைக்காலத்துக்கு மிகவும் சிறந்தது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்கும். ஆன்டிபாக்டீரியல் என்பதால் பருவகால தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது” என்று நயன்தாரா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது இந்த பதிவை கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல திரைப்பட நடிகை நயன்தாரா, சமந்தாவை விட இரண்டு மடங்கு அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 8.7 மில்லியன் ஃபாலோவர்களை செம்பருத்தி டீ குடிக்க கோரியுள்ளார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று நோய், முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு செம்பருத்தி டீ பயனாக இருக்கும் என்ற அவரது கூற்று எதுவும் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை.

நயன்தாராவின் இந்தப் பதிவு அவரது "பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான" விளம்பரம் போலவும் தெரிகிறது. எதைப் பற்றியும் தெரியாமல் தவறான தகவல்களால் தனது ஃபாலோவர்ஸ்களை தவறாக வழிநடத்துகிறார். செம்பருத்தி தேநீரின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம்” என பதிவிட்டு, அதற்கான காரணங்களையும் விவரித்துள்ளார். இதையடுத்து, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்துவிடுவார்கள்” என பதிவிட்டுள்ளார். முன்னதாக, இதே மருத்துவர் நடிகை சமந்தாவின் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்பாடு தொடர்பான பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x