Published : 28 Jul 2024 11:52 AM
Last Updated : 28 Jul 2024 11:52 AM

திரை விமர்சனம்: ராயன்

ராயன் படத்தில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சந்தீப் கிஷண்

கிராமத்தில் சிறு வயதில் பெற்றோரைத் தொலைக்கும் காத்தவராயன் (தனுஷ்), தன் தம்பிகள் முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷண்), மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்), தங்கை துர்கா (துஷாராவிஜயன்) ஆகியோருடன் சென்னைக்கு வருகிறார். ‘ஃபாஸ்ட் ஃபுட்’ நடத்தி, ஒரே குடும்பமாகப் பாசத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

அந்தப் பகுதியில் துரை (சரவணன்), சேது (எஸ்.ஜே.சூர்யா) என 2 தாதாக்கள் இடையே பெரும் பகை. அவர்களுக்குள் மோதலை உருவாக்க போலீஸ் உயரதிகாரி பிரகாஷ்ராஜ் திட்டம் தீட்டுகிறார்.இந்த மோதலுக்குள் தனுஷ் குடும்பம் எப்படிச் சிக்குகிறது, குடும்பத்தைக் காக்க அவர் என்ன செய்கிறார் என்பதுதான் ரத்தம் தெறிக்கும் ‘ராயன்’ கதை.

நாயகனாக மட்டுமல்லாமல் இயக்கத்தையும் கையில் எடுத்திருக்கிறார் தனுஷ். தம்பி, தங்கைக்காக வாழும் அண்ணன் என்கிற பழைய ஃபார்முலா கதைதான் என்றாலும் இந்தக் காலத்துக்கே உரிய ரத்தம் குழைத்து கொடுத்திருக்கிறார், தனுஷ். தம்பி, தங்கைக்காக ‘சைலன்ட் மோடில்’ குடும்பத்தை தனுஷ் தலையில் தூக்கி சுமப்பது என்கிற முதல் பாதி அதிக எதிர்பார்ப்போடு நகர்கிறது. மாஸான அந்த ‘இன்டர்வெல் பிளாக்’குக்கு திரையரங்கில் அத்தனை அப்ளாஸ். ஆனால், அடுத்தப் பாதியில் தடுமாறத் தொடங்கி விடுகிறது திரைக்கதை.

குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் வந்தாலும் பழிக்குப் பழியாக நடக்கும் கொலைகளை கொடூரமாகக் காட்சிப் படுத்தி இருப்பது உறைய வைக்கிறது. அதைத் தடுக்காமல், ‘இன்னொரு கொலை செய்’ என்று போலீஸ் அதிகாரியே பேரம் பேசுவது அதிர்ச்சி. தந்தை ஸ்தானத்தில் உள்ளவரையே கொல்ல முடிவு செய்யும் உடன்பிறப்புகளின் அந்த ட்விஸ்ட், வலுவான காரணமில்லாததால் தனியாக நிற்கிறது.

மொட்டைத் தலையுடன் முதல் பாதியில் அமைதியாகவும் இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாகவும் ‘மெச்சூர்டான’ நடிப்பில் மிரட்டுகிறார், நாயகன் தனுஷ். திரையில் அவரை அப்படி பார்ப்பதே அழகாக இருக்கிறது. தனக்கு ஜோடி இல்லாமல் தம்பிக்கு காதல் காட்சிகளை வைத்ததும் சக நடிகர்களுக்கும் போதுமான ‘ஸ்பேஸ்’ கொடுத்திருப்பதும் இயக்குநர் தனுஷின் சிறப்பு.

தம்பிகளாக வரும் சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம் அந்தக் கதாபாத்திரங்களுக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். தங்கையாக வரும் துஷாரா விஜயனின் நடிப்பும் அவர் கதாபாத்திர வடிவமைப்பும் அருமை.

தாதா என்றாலும் ஜாலியாகவும் கேலியாகவும் சிறந்த பங்களிப்பை தந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சின்ன கேரக்டர் என்றாலும் இன்னொரு தாதாவாக கண்ணுக்குள் நிற்கிறார் சரவணன். தனுஷுக்கு உதவும் பாத்திரத்தில் வரும் செல்வராகவன் அழகாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். பிரகாஷ் ராஜ் குறைவான காட்சிகளிலேயே தோன்றுகிறார். அபர்ணா பாலமுரளியும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். வரலட்சுமி, திலீபன், இளவரசு, தேவதர்ஷினி, அறந்தாங்கி நிஷா போன்றோர் வந்து போகிறார்கள்.

படம் தொய்வாகும் போதெல்லாம் பின்னணி இசையில் மீட்டுக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பிரசன்னா ஜெ.கே.வின் படத்தொகுப்பில் குறையில்லை. ‘கலர்டோன்’ மற்றும் லைட்டிங் வழியாக கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறது ஓம் பிரகாஷின் கச்சிதமான ஒளிப்பதிவு. இரண்டாம் பாதி திரைக்கதையில் ரத்தத்தைக் குறைத்து கதைக்கு மெனக்கெட்டிருந்தால் இந்த ராயனின் ஆக்‌ஷனை இன்னும் ரசித்திருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x