Published : 30 May 2018 11:56 AM
Last Updated : 30 May 2018 11:56 AM
கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். கமலின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார்.
ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் இருவரும் சேர்ந்து எடிட் செய்தனர்.
ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல், லஞ்சம் வாங்கும் மகனையே தண்டிப்பதுதான் படத்தின் ஹைலைட். வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவரான அப்பா கமல், அந்தக்கலையை வைத்தே தவறு செய்தவர்களைத் தண்டிப்பார். இந்தப் படம் ரிலீஸாகி, கடந்த 9-ம் தேதியுடன் 22 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ இருவரும் மறுபடி இணைய இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்டது. முதலில் தில் ராஜு தயாரிப்பதாக இருந்த இந்தப் படம், பின்னர் லைகா புரொடக்ஷனுக்கு கைமாறியது. இந்த வருட இறுதியில், அதாவது ‘2.0’ ரிலீஸுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT