Published : 22 Jul 2024 11:43 AM
Last Updated : 22 Jul 2024 11:43 AM

படப்பிடிப்புகளில் தொடரும் விபத்துகள்! - உயிரிழப்பைத் தடுக்க தீர்வு என்ன?

திரைப்படங்கள் காட்டும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உலகெங்கும் இருக்கிறார்கள் உற்சாகமான ரசிகர்கள். ஹீரோ பறந்து பறந்து வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சிகளில் பார்வையாளன், தன்னையே ஹீரோவாகப் பார்க்கிறான்.

அதனாலேயே ஆக்‌ஷன் காட்சிகளை அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த ஆக்‌ஷனுக்கு பின்னே, ஹீரோவுக்கும் வில்லனுக்கும் டூப்பாகவும் அடிகளை வாங்குபவர்களாகவும் இருக்கிறார்கள், அனைத்து ரிஸ்க்கையும் தாங்கும் முகமறியா ‘ஸ்டன்ட் மேன்கள்’. திரைப்படங்களில் பல வருடங்களாகத் தொடர்ந்து நடக்கும் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இவர்கள் தான். சமீபத்தில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை வரை தொடர்கிறது, இந்த சோகம்!

இதுபற்றி பிரபல ஸ்டன்ட் இயக்குநர் பாண்டியன் மாஸ்டரிடம் பேசினோம். “ஸ்டன்ட் யூனியன்ல தொழிலை முறையா கத்துக்கிட்டவங்களைத் தான் இப்ப சேர்க்கிறோம். கார் ஸ்டன்ட், பைக் ஸ்டன்ட், குதிரை ஸ்டன்ட், ஆயுதங்கள் பயன்படுத்தறதுக்குன்னு ஒவ்வொரு பைட்டுக்கும் தனித்தனி ஆட்கள் இருக்காங்க. புதுசா சேர்ந்திருந்தா, அவங்களுக்கு என்ன மாதிரி வேலை கொடுக்கணும்னு மாஸ்டர்களுக்கு தெரியும். அதுக்கு ஏற்ற மாதிரிதான் பண்றோம். இன்னைக்கு டெக்னாலஜி ரொம்ப முன்னேறி இருந்தாலும் ‘ரோப்’ கட்டி, ஸ்டன்ட் பண்றதைத் தவிர்க்க முடியலை. பெரும்பாலான முன்னணி ஹீரோ படங்கள்ல ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கறதால, எந்த ரிஸ்க்கையும் எடுக்கறதுக்கு ஸ்டன்ட் கலைஞர்கள் துணிஞ்சு இறங்கறாங்க. இருந்தாலும் ஸ்டன்ட்-ங்கறது எல்லா காலத்துலயும் ஆபத்து நிறைஞ்சதுதானே. அசம்பாவிதம் நடந்துடக் கூடாதுன்னு முன்னெச்சரிக்கையா இருந்தாலும் சில நேரங்கள்ல இப்படி நடந்துடுது” என்கிறார் பாண்டியன் மாஸ்டர்.

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கவே முடியாதா? என்று கேட்டால், “ஏன் முடியாது? இதுக்கு முன்னால மூத்த மாஸ்டர்கள் பண்ணும் போது, நிறைய டிஸ்கஷன் இருக்கும். ‘இப்படி நடந்தா, இப்படி எஸ்கேப் ஆகணும்’ங்கற மாதிரி தகவல் பரிமாற்றங்கள் இருக்கும். இன்னைக்கு அது இல்லைன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம, டான்ஸ் காட்சி எடுக்கிறாங்கன்னா, அதுக்கு ரெண்டு மூனு நாள் ரிகர்சல் பார்க்கிறாங்க. ஸ்டன்டுக்கு அப்படி பண்றதில்லை. சிலர் மட்டும்தான் அதை கேட்டுப் பண்றாங்க. ரிகர்சல் பண்ணினா, எங்க என்ன நடக்கும், எப்படி நடந்துக்கணும்னு நமக்கு புரியும். ரிகர்சல் கண்டிப்பா இருந்தா இனியும் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் அவர்.

ஸ்டன்ட் நடிகர்களுக்கு இன்சூரன்ஸ்! ஸ்டன்ட் நடிகர்கள், சர்க்கஸ் கலைஞர்களின் தொழில், ரிஸ்க்கானது என்பதால் அவர்களுக்கு முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன் வருவதில்லை. 2010-ம் ஆண்டு வரை அப்படித்தான் இருந்தது. இருந்தாலும் ‘ஸ்டன்ட் யூனியன்’ முயற்சியால் சில நிறுவனங்கள் இப்போது முன் வந்திருக்கின்றன.

“இப்ப ஒரு படத்துல ஸ்டன்ட் நடிகருக்கு கால்ல அடிபட்டு மூன்று மாசம் வேலை இல்லைன்னா, அதுவரை சங்கம் சார்பா சம்பளம் மாதிரி கொடுக்கிறோம். சில ஹீரோக்களும் உதவி பண்றாங்க. தயாரிப்பு நிறுவனங்களும் உதவுறாங்க” என்கிறார்கள் சில ஸ்டன்ட் கலைஞர்கள்.

சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் படம் ஆரம்பிக்கும்போதே மொத்தக் குழுவுக்கும் இன்சூரன்ஸ் செய்கிறார்கள்.

“நான் தயாரிக்கும் எல்லா படங்கள்லயும் மொத்த குழுவுக்கும் இன்சூரன்ஸ் பண்ணிடறேன். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதை செய்றாங்க. படப்பிடிப்புகள்ல எது வேணும்னாலும் நடக்கலாம் அப்படிங்கறதால இன்சூரன்ஸ் தவிர்க்க முடியாத விஷயமா இருக்கு.

இந்த இன்சூரன்ஸில் மருத்துவக் காப்பீடு கிடைக்கும். சிகிச்சைக்கான செலவுகள் மட்டும் இதுக்குள்ள வரும். பணம் கிடைக்காது. அதுக்கு ஸ்டன்ட் யூனியன் சில ஏற்பாடுகளை செய்திருக்கு” என்கிறார், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் இணைச் செயலாளர் ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி. இவர், மாநாடு, ‘வணங்கான்’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர்.

மருத்துவ காப்பீடு கிடைக்கும் என்றாலும் உயிர் முக்கியம் என்பதால் பாதுகாப்பான ஃபைட் பற்றி ஸ்டன்ட் யூனியன் சமீபத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x