Published : 11 Jul 2024 05:01 PM
Last Updated : 11 Jul 2024 05:01 PM

“அன்று மைக்கேல் ஜாக்சன் உடனான சந்திப்பை தள்ளிவைத்தேன்...” - ரஹ்மான் சுவாரஸ்ய பகிர்வு

மலேசியா: “மைக்கேல் ஜாக்சன் உங்களைப் பார்க்க வேண்டும் என மெயில் வந்தது. ஆனால், ‘நான் இப்போது அவரை பார்க்க விரும்பவில்லை. நான் ஆஸ்கர் விருது வென்றால் அவரைப் பார்க்கிறேன். இல்லையென்றால் நான் சந்திக்கவில்லை’ என்று சொல்லிவிட்டேன்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மைக்கேல் ஜாக்சன் உடனான தனது சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் ஏ.ஆர்.ரஹ்மான், “2009-ம் ஆண்டு தொடக்கத்தில் நான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், என்னுடைய ஏஜென்ட்டுடன் இருந்தேன். அவர் தன்னுடைய நண்பர் என ஒருவரை அறிமுகப்படுத்தி, ‘இவர் தான் மைக்கேல் ஜாக்சனுக்கு மேனேஜராக உள்ளார்’ என்றார். உடனே நான் அவரிடம், ‘நான் மைக்கேல் ஜாக்சனை சந்திக்க முடியுமா?’ என கேட்டேன். அதற்கு அவர், “கண்டிப்பாக பார்க்கலாம். நான் இப்போதே மெயில் அனுப்புகிறேன்’ என்றார். ஒரு வாரம் கடந்தும் எந்த பதிலும் இல்லை. நானும் சரி என அமைதியாக இருந்தேன்.

பின்னர் ஆஸ்கர் விருது விழாவின் நாமினேஷன் பட்டியல் வெளியானது. அதில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர், ‘மைக்கேல் ஜாக்சன் உங்களைப் பார்க்க வேண்டும்’ என மெயில் வந்தது. ஆனால், ‘நான் இப்போது அவரை பார்க்க விரும்பவில்லை. நான் ஆஸ்கர் விருது வென்றால் அவரைப் பார்க்கிறேன். இல்லையென்றால் நான் சந்திக்கவில்லை’ என்று சொல்லிவிட்டேன்.

எனக்கு அப்போது நான் கண்டிப்பாக ஆஸ்கர் விருது வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது. சொன்னபடியே நான் ஆஸ்கர் வென்றேன். அடுத்த நாள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்கேல் ஜாக்சன் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டில் தான் இருந்தார். அப்போது சூரியன் அஸ்தமனம் ஆகியிருந்தது. 6.30 மணி இருக்கும். அப்போது அவரது வீட்டின் கதவை யாரோ திறந்தார்கள். நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். 2 ஆஸ்கர் விருதுகளை வென்ற சந்தோஷத்தில் உலகத்தின் மேலே மிதந்து கொண்டிருந்தேன்” என்றார்.

மேலும், “அவருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. அவர் மிகவும் அன்பான மனிதர். ‘எனக்கு உங்களின் பாடல் மிகவும் பிடித்திருந்தது’ என அவர் கூறினார். உலக அமைதி குறித்து பேசிய அவர் இணைந்து பாடல் உருவாக்குவது குறித்தும் பேசினார். நான் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது எனக்கு 2 மணி நேரம் மட்டுமே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தன் குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். பின், ‘நான் நடனமாடும்போது மனதார ஆடுவேன்’ என்று கூறினார். அந்தச் சந்திப்பை என்னால் மறக்க முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x