Published : 04 May 2018 11:29 AM
Last Updated : 04 May 2018 11:29 AM
தமிழ் சினிமாவின் ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் இப்போது என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பிஸியாக உதவி செய்து கொண்டிருக்கிறார்.
எதற்காக தெரியுமா? ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் - 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காகத் தான். இந்த போட்டியின் இறுதிச்சுற்று வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் எம்ஐடி யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் உதவிபுரிவதற்காக ‘ஹெலிகாப்டர் சோதனை பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர்’ எனும் புதிய பதவியை நடிகர் அஜித் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
பள்ளி மாணவராக இருக்கும்போதே ஏரோ மாடலிங்கில் விருப்பம் கொண்ட அஜித், ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது நமக்கு தெரியும். அதனால், அவர் இந்த புதிய சவாலை ஏற்றுக்கொண்டதில் அவ்வளவு ஆச்சரியம் இருக்காது.
எம்ஐடியின் தாக்ஷா (Dhaksha) எனப்படும் டீம் உடன் தான் கடந்த வியாழன் முதல் அஜித் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார். ஒருமுறை எம்ஐடிக்கு வந்து இந்த போட்டிக்காக உதவுவதற்கு அஜித் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1,000 ரூபாய். கோடிகளில் புரளும் அஜித், இதனால் வரும் வருமானத்தை எம்ஐடியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளார்.
எம்ஐடியின் ஏரோஸ்பேஸ் ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார் இதுகுறித்து கூறுகையில், “தனியார் நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், அரசாங்கம் தான் இந்த போட்டிக்கு நிதி அளிக்கிறது. இந்த போட்டிக்கு சென்ற 100 நாடுகளில் 55 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம். இந்த துறையில் அஜித்தின் திறமை மற்றும் அனுபவத்தால் எங்களின் எண்ணம் வலுப்பெறும்” என்கிறார்.
மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தவிக்கும் நோயாளிகள், தொலை தூர கிராமங்களில் உள்ள நோயாளிகளின் ரத்த மாதிரியை பெற்று வரும் வகையில் ஆளில்லா விமானத்தை உருவாக்குவது தான், இந்த போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT