Published : 01 May 2018 10:06 AM
Last Updated : 01 May 2018 10:06 AM

‘இன்றைய ரசிகர்களை ஏமாற்ற முடியாது!’: கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜன் நேர்காணல்

“ஒ

ரு படம் பெரிய ஹிட்டாகிவிட்டால் படத்தைப் பற்றி பலரும் பேசுவார்கள். நமது பணியைப் பற்றிப் பேசாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், ‘பரத் அனே நேனு’-வில் என் பணியை எல்லோரும் பாராட்டியிருக்கிறார்கள். இதற்கு எனது தந்தைக்கும், குருநாதர் சாபுசிரில் சாருக்கும்தான் என் முதல் நன்றி” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் சினிமா கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜன். சிதம்பரத்துக்காரர். மும்பை யில் ஆர்ட் டைரக்டராக பல இந்திப் படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

‘பரத் அனே நேனு’ பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

‘பரத் அனே நேனு’ படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் சார் ஒப்பந்தமாகியபோது ‘இந்த படத்துக்கு கலை இயக்குநர் யார்?’ என்கிற பேச்சு வந்தபோது ‘இன்னும் யாரும் ஒப்பந்தமாகவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அப்போது ‘சுரேஷ் செல்வராஜன் இப்படத்துக்கு சரியாக இருப்பார்’ என, அவர்தான் என்னை சிபாரிசு செய்திருக்கிறார். உடனே என்னை அழைத்துப் பேசினார்கள். ஒப்பந்தமானேன்.

இந்தப் படத்துக்காக ஆந்திர சட்டசபை, பெரிய குளம், பெரிய கோயில், முதலமைச்சர் அலுவலகம், முதலமைச்சர் அறை மற்றும் பாடல்களுக்கான அரங்கம் என அனைத்துமே செட்தான்.

எதை முன்னுதாரணமாகக் கொண்டு ஆந்திரச் சட்டசபை அரங்கத்தை வடிவமைத்தீர்கள்?

‘5 நாட்கள் மட்டுமே நடக்கவுள்ள சட்டப்பேரவைக் காட்சிக்கான படப்பிடிப்புக்காக, 2 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா?’ என முதலில் யோசித்தார்கள்.

கேரளா மற்றும் போபால் ஆகிய ஊர்களில் புதிய சட்டசபைக்கு மாறிவிட்டதால், அங்குள்ள பழைய சட்ட சபையில் படமாக்கலாம் என முயற்சித்தோம்.

ஆனால், அது தெலுங்குப் படத்துக்குரிய காட்சிகளைப் போல இல்லை. அந்த சமயத்தில்தான் முக்கியமான காட்சி என்பதால் செட் போடலாம் என இயக்குநரும் தயாரிப்பாளரும் முடிவுக்கு வந்தனர்.

4 மாதங்கள் தொடர்ந்து இதற்காக ஆய்வுகள் மேற்கொண்டு, சினிமாவுக்கான விஷயங்களை எல்லாம் சேர்த்து, ஹைதராபாத் ஸ்டைலில் அரங்குகள் அமைத்து சட்டசபை அரங்கை உருவாக்கினேன்.

ஆந்திர மாநிலம் பிரிவதற்கு முந்தைய கதை என்பதால் 300 எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் அமர்ந்திருப்பது போல காட்சி அமைத்தார்கள். அதுவே பிரம்மாண்டமாக அமைந்துவிட்டது.

சட்டசபை அரங்கைப் பார்த்து மகேஷ் பாபு என்ன சொன்னார்?

‘இதற்குள் வந்தால் செட் என்பதே தெரியவில்லை. நடிக்கணும் என நிறையப் பயிற்சி எடுத்து வந்தேன். நிஜச் சட்டசபையில் என்னைப் பேச வைப்பது போல் உள்ளது’ என்று மகேஷ்பாபு சார் வியந்து பேசினார்.

இயக்குநர் கொரட்டலா சிவா சார் வந்து முழுவதும் சுற்றிப் பார்த்தார். பிறகு ஒரு ஓரத்தில் போய் அமர்ந்துகொண்டு பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். நிஜ சட்டசபை யில் படப்பிடிப்பு நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. அங்கே படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவருமே புகைப்படம் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ராம்சரண் சார் உள்ளிட்ட பல தெலுங்கு திரையுலகினர் வந்து அந்த அரங்கின் செட் அமைப்பைப் பார்த்துப் பிரமித்துப் போனார்கள்.

இன்னொரு பிரம்மாண்டமான கோயில் அரங்கம் வடிவமைத்தீர் களாமே. அது குறித்து...

புனேயில் ஒரு பிரம்மாண்டமான கோயிலில்தான் முதலில் ஒரு பாடலை படமாக்குவதாக இருந்தது. ஆனால், நாட்கள் குறைவாக இருந்தததால் ஹைதராபாத்திலேயே ஒன்றரை ஏக்கர் நிலத்தில் செட் போட்டோம். 100-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஆட வேண்டும் என்பதால் போடக்கூடிய செட்டு வலு வாக இருக்க வேண்டும். எனவே 500 பேரைக் கொண்டு என் வேலை யைத் தொடங்கினேன். வேலையை முடித்தவுடன் மகேஷ்பாபு சார் வந்து ‘இதைச் செட் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள். இப்படிப் போட்டிருக்கீங்களே!’ என்று மனந்திறந்து பாராட்டினார். ராஜூசுந்தரம் மாஸ்டர் ‘இந்த மாதிரியெல்லாம் செட்டை பார்த்து ரொம்ப வருஷமாச்சு. எங்கே வேண்டுமானாலும் கேமரா வெச்சு ஷூட் பண்ற மாதிரிப் போட்டிருக்கீங்க. சூப்பர்” என்றார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என அனைவருக்குமே பயங்கரச் சந்தோஷம்.

முதலமைச்சர் அறை வடிவமைத்த கலை ரகசியத்தைப் பகிர்ந்துகொள் ளுங்களேன்?

நான் என்ன செட் போட்டாலும், இணையத்தில் உள்ள புகைப் படத்தை முன்மாதிரியாக வைத்துதான் இந்த செட் அமைத்திருக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்று நினைப்பேன். ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுடைய அறையைப் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சேகரித்தேன். இதை எல்லாம் வைத்து ஹைதராபாத் பின்னணியில் புதுமையாக இருக்கட்டும் என்று போட்டதுதான் முதலமைச்சர் அறை செட். யாருமே இது வேறு அறை மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

நிறையத் தமிழ் படங்கள் செய்வது இல்லையே, என்ன காரணம்?

சில தமிழ்ப் படங்களை முடிச்சுட்டு, சாபுசிரில் சார் மும்பைக்குச் சென்றார். அவருடனே நானும் சென்று 20 இந்திப் படங்களுக்கு மேல் வேலை பார்த்தேன். நட்பு வட்டம் எல்லாம் அமைந்து, அங்கேயே 8 வருஷங்கள் இருந்துவிட்டேன். அப்புறம் கிடைத்த வாய்ப்புகளும் இந்திப் படங்களாகவே இருந்தததால் வீடு வாங்கி அங்கேயே செட்டிலாகிவிட்டேன். ‘பிரதர்ஸ்’ இந்திப் படத்தின் மூலமாகத்தான் தமிழில் ‘இருமுகன்’ வாய்ப்பே கிடைத்தது. இப்போது தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. தமிழில் பெரிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.அப்போது தமிழ் திரை ரசிகர்களுக்கு நான் பளீர் எனத் தெரிவேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x