Published : 03 Jul 2024 05:18 PM
Last Updated : 03 Jul 2024 05:18 PM
சென்னை: நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லவ் யூ ஃபார் எவர்’ என தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஜித்தின் கையைபிடித்தபடி மருத்துவமனையில் ஷாலினி இருக்கும்படியான அந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி, மறுபுறம் ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித்குமார். அண்மையில் இரண்டு படங்களின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ‘விடாமுயற்சி’ படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அஜித் நேற்று (ஜூலை 2) சென்னை திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாலினியை கவனித்துக்கொள்ள அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் கையை பற்றிக்கொண்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘லவ் யூ ஃபார் எவர்’ என கேப்ஷனிட்டுள்ளார். ஷாலினி விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும் அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து எதையும் ஷாலினி பகிரவில்லை. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வியாழக்கிழமை வெளியிடப்படும் என அஜித்தின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment