Published : 26 May 2018 05:40 PM
Last Updated : 26 May 2018 05:40 PM

“அரசும் மக்களும் ஒன்றாக இருக்காதா?” - இயக்குநர் பா.இரஞ்சித் ஆதங்கம்

‘அரசும் மக்களும் ஒன்றாக இருக்காதா?’ என ஆதங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம், தமிழர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இந்த வன்முறை வெறியாட்டம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய வன்முறையாட்டம், மிகப்பெரிய படுகொலை தூத்துக்குடியில் நடந்துள்ளது. மக்களின் நிலம், காற்று மாசுபடுதலை எதிர்த்து 90 நாட்களுக்கும் மேலாக அமைதியாக, கட்டுக்கோப்பான முறையில் நடைபெற்ற போராட்டத்தை, திட்டமிட்டுக் கலவரமாக மாற்றி, ஏகப்பட்ட பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதை மிகப்பெரிய வன்முறையாக நான் நினைக்கிறேன். சொந்த மக்கள் மீது, சொந்த அரசு நிகழ்த்திய மிகப்பெரிய கொடூரம் இது. எந்த இடத்திலும் எப்படியும் தாங்கிக்கொள்ள முடியாத பெரும்துயரைக் கொடுத்திருக்கிறது.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடந்த மனிதர்களை ஏளனம் செய்து பேசிய இழிவான வார்த்தைகள், அவர்களைத் தரதரவென இழுத்துப் போட்ட செயல்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, மனித உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன், எளிய மக்களை சுட்டுக் கொன்றுவிட்டுத்தான் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வியும் தோன்றுகிறது. இது, தீராத மன உளைச்சலைத் தந்துள்ளது. இந்த மன உளைச்சல், தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் எல்லாருக்கும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டிய கட்டாயச் சூழல் இங்கு இருக்கிறது.

‘அரசு மக்களுக்கானது’ என்பதை மறந்து நீண்ட நாட்களாகி விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. அரசும் மக்களும் ஒன்றாக இருக்காதா? என்ற ஆதங்கம் எப்போதும் இருக்கிறது. மக்கள் ஓட்டுப்போட்டு உருவான அரசு, மக்களை ஒடுக்குவதற்கும் நசுக்குவதற்கும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக இருக்கிறது. மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு நிகழ்த்தும் அரசாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களுக்குத் தீராத வேதனையையும், மன உளைச்சலையும் தந்து கொண்டிருக்கிறது” என ஆதங்கத்துடன் பேசினார்.

“ஒரு வீட்டை நிர்வகிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, நாட்டை நிர்வகிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?” - விஜய் ஆண்டனி கேள்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x