Published : 26 Jun 2024 03:59 PM
Last Updated : 26 Jun 2024 03:59 PM

சோதனை மேல் சோதனைகளை சந்தித்த 'சேனாதிபதி' சாதிப்பாரா? | இந்தியன் 2 ஸ்பெஷல்

“அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!” என்ற வாசகத்துடன் 2019-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கோலிவுட்டின் வலசையை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் ஷங்கர். கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து, இந்தியன் முதல் பாகம் வெளியான பிறகு வந்த இரண்டாம் பாக அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது மிகப் பெரிய ஆர்வத்தைக் கூட்டியிருந்தது. அதற்கு காரணம், 1996-லிருந்து 2019-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் என வித்தியாசமான முயற்சிகளால் சினிமா ரசிகர்களின் ரசனைகளை வேறு தளத்துக்கு கொண்டு சேர்த்திருந்தார்.

அதேநேரம், 2018-ம் ஆண்டு பிப்.21-ம் தேதி, மதுரையில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி அரசியல் களம் புகுந்தார் கமல்ஹாசன். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு , முதல் தேர்தலிலேயே 3.72% வாக்குகளைப் பெற்றது கமல்ஹாசனின் மநீம. அந்தப் பக்கம் இயக்குநர் ஷங்கர், இந்தியன் முதல் பாகத்துக்குப் பிறகான 23 ஆண்டு காலக்கட்டத்தில், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என தனது பிரமாண்ட திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த திரை உலகையும் ஈர்த்திருந்தார். எனவே, இந்த காம்போ மீண்டும் இணையும் அறிவிப்பால் எகிறி குதித்த சினிமா ரசிகர்களின் பல்ஸ் வானத்தை இடித்தது.

‘இந்தியன்’ படத்தின் முதல் பாகமே அரசு எந்திரத்தில் புரையோடிக்கிடக்கும் ஊழல் பற்றி பேசியிருந்தது. இரண்டாம் பாக அறிவிப்பு வெளியான புதிதில் கமல்ஹாசன் முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால், இதுதான் கமல்ஹாசனின் கடைசித் திரைப்படம் என்று கூறப்பட்டது. அதனால், இந்தப் படத்தில் அரசியல் அனல்பறக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்க ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்‌ஷ்மி சரவணக்குமார் எழுத்தில் ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருந்தது படத்தின் மீதான ஆவலை மேலும் கூட்டியிருந்தது. படத்தின் வேலைகளும் தொடங்கி நடைபெற்று வந்தது. 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் பரவிய கரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது.

விபத்தில் மூவர் உயிரிழப்பு: கரோனாவால் உலகம் செய்வதறியாது தவித்து நின்றது. உலக நாடுகள் தங்கள் எல்லைகளை அடைத்தன. உயிர் பலி அதிகரித்தது. தொழில்கள் முடங்கின. மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. உலகம் வீட்டுக்குள் அடைபட்டது. கண்ணுக்குத் தெரியாத கிருமி உலகை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. இந்தியன், அமெரிக்கன், ஜப்பானியன் யாரையும் விட்டுவைக்கவில்லை.

ஒரு வழியாக 2020-ம் ஆண்டில், கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடந்து வந்தது. அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் பூந்தமல்லி அருகே நடந்த படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை ரத்து செய்து, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கமல்ஹாசன் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், ‘இந்த விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினேன். அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பி துன்புறுத்துகின்றனர். ஏற்கெனவே இந்த விபத்து சம்பவத்தினால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை. எனவே, விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக் கூடாது என்று போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்த உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்துக்கு போலீஸார் அழைக்கக் கூடாது. அதேநேரம், புலன் விசாரணை தொடர்பாக விசாரணை அதிகாரி முன்பு கமல் ஆஜராக உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது. இந்தப் பிரச்சினையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு ஒரு வழியாக தீர்வு காணப்பட்டது.

ஆனால், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடிகர் விவேக், அக்டோபர் மாதத்தில் மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தனர். முதல் பாகம் பார்த்த யாரும் நெடுமுடி வேணுவை மறந்திருக்கமாட்டார்கள். அதோடு கமல்ஹாசன் உடன் முதன்முறையாக இந்தப்படத்தில்தான் இணைந்து நடித்து வந்தார். இப்படியாக இப்படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிபோய் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் படம் கைவிடப்பட்டதாக பேசப்பட்டது.

லைகா தொடர்ந்த வழக்கு: இந்தச் சூழலில் 2021-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் தேதி, RC15 , ராம்சரணின் 15-வது திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்ட பேச்சை உறுதி செய்தது. தொடர்ந்து ஷங்கர் ராம்சரணின் படத்தை இயக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அதில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும். படத்துக்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசி நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த தயாராக இருப்பதாகவும் மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது. கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தோம். படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை தொடங்குவதில் தேவையில்லாத தாமத்தை ஏற்படுத்தினர்.

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும். அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு நான் பொறுப்பல்ல.இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது.பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல என்று கூறியிருந்தார்.

இந்த களேபரங்களுக்கு மத்தியில், கமல்ஹாசனின் மநீம 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 180 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் 33.26% வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதனிடையே 4 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் 'ஆரம்பிக்கலாமா' என்ற வசனத்துடன் மீண்டும் திரைத்துறை பக்கம், விக்ரமாக வந்த கமல்ஹாசன் வெற்றியுடன் வசூலையும் வாரிச்சுருட்டினார்.

இந்த வெற்றி ‘இந்தியன் 2’ படத்தை முடிப்பதற்கு பெரும் உதவியாக அமைந்தது. அதற்குள் இயக்குநர் ஷங்கரும் ராம்சரண் படத்தை முடித்திருந்தார். லைகா - ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஒத்துழைப்புடன் பல சோதனைகளைக் கடந்து, ஜூலை 12-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகிவிட்டது இந்தியன் 2. சேனாதிபதி சந்தித்த இந்த சோதனைகள் எல்லாம் சாதனையாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x