Published : 25 Jun 2024 02:38 PM
Last Updated : 25 Jun 2024 02:38 PM
சென்னை: “நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கெடுத்திருக்க வேண்டியவர்கள். மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டிய மேடை இது” என நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக பேசியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “இரண்டாம் பாகம் என்ற ஃபேஷன் வருவதற்கு முன்பே நாங்கள் முதல் பாகத்தை எடுத்துவிட்டோம். ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தின் டப்பிங் பணிகளின்போதே நான் ஷங்கரிடம் சொன்னேன். ‘சார் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம்’ என்று.
அந்தப் படத்தின் ரிலீஸ் படபடப்பில் இருந்தோம். இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கருவை எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் ஊழல் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகைக்கு உங்கள் மத்தியில் அர்த்தம் உருவாகியுள்ளது.
நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கேடுத்திருக்க வேண்டியவர்கள். மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டியவர்கள். இப்போது தான் விவேக்கின் காட்சிகளை படமாக்கியதாக தோன்றுகிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு ‘இந்தியன்’ சீரிஸ் ஓர் உதாரணம். இயக்குநர் ஷங்கர் இன்றும் இளைஞராகவே இருக்கிறார்.
இந்தப் படம் 5,6 வருடங்கள் எடுத்ததற்கு தொழில்நுட்ப கலைஞர்களோ, நடிகர்களோ காரணமில்லை. இயற்கை தான் காரணம். கோவிட், விபத்து என பல விஷயங்கள் இடையூறாக அமைந்தன. இதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்து வந்த லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கடமைபட்டுள்ளோம்.
இந்த வெற்றியை அனுபவிக்க வேண்டியவர்கள் அவர்கள். இந்தப் படத்தில் உதயநிதி ஈடுப்பட்டதற்கு காரணம், இந்த இயக்குநரையும், நடிகரையும் அவர் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை. 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்துக்காக உழைத்தவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்கள் சந்தோஷமாக உழைத்தார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT