Last Updated : 22 Jun, 2024 06:09 PM

1  

Published : 22 Jun 2024 06:09 PM
Last Updated : 22 Jun 2024 06:09 PM

‘அயலான்’ முதல் ‘மகாராஜா’ வரை: தமிழ் சினிமாவில் ஆறுதலும் ஏமாற்றமும் - ஒரு பார்வை | First half of 2024

ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி பிரஸ்மீட்கள், ஆடியோ லான்ச், டீசர், ட்ரெய்லர், சிங்கிள், புரொமோஷன்ஸ் (வெகுஜன ஊடகம் + யூடியூபர், இன்ஃபுளுவன்சர்ஸ்) என இத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட இறுதியில் படம் வெளியான முதல் நாள் பார்வையாளர்களின் அந்த ஒற்றை வரி ‘ரிவியூ’வில் எல்லா ஃபர்னிச்சர்களும் உடைக்கப்படுவிடுகின்றன. அப்படி இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் உடைக்கப்பட்ட ஃபர்னிச்சர்களின் துகள்களை லாரிகளில்தான் அள்ள வேண்டும்.

நார்மலைஸாகும் வன்முறை: கடந்த 2023-ம் பொறுத்தவரை அதன் தொடக்கத்திலிருந்தே ‘அயோத்தி’, ‘டாடா’, ‘பொம்மை நாயகி’, ‘குட்நைட்’ என சிறு பட்ஜெட்டில் வெளியான படங்களை மக்கள் கொண்டாடினர். அறிமுக இயக்குநர்களுக்கான காலம் என வரையறுக்கப்பட்டது. அழுத்தமான கன்டன்ட் இருந்தால் தமிழ் சினிமாவில் சிவப்பு கம்பளம் தயார் என்ற ட்ரெண்ட் உருவாக்கப்பட்டிருந்தது.

‘விடுதலை’, ‘பார்க்கிங்’, ‘மாவீரன்’, ‘ஃபர்ஹானா’, ‘சித்தா’ படங்கள் களம் கோரும் நேர்மையான திரைக்கதையால் நேர் செய்தன. ‘போர் தொழில்’ படத்தில் வன்முறை இருந்தாலும், அது கதையோடு ஒட்டியிருந்தது. 2023-ன் இறுதிப்பகுதியில் வெளியான ‘லியோ’, ‘ஜெயிலர்’, ‘பைட் க்ளப்’ படங்களின் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் வன்முறையை நார்மலைஸ் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. கதைக்குள் வன்முறை என்பதைக் கடந்து வன்முறைக்குள் கதை என்ற ட்ரெண்டை சமீபத்திய படங்களில் பார்க்க முடிகிறது.

உதாரணமாக, ‘சித்தா’, ‘மகாராஜா’ ஆகிய இரண்டு படங்களும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பேசுகின்றன. ‘சித்தா’ பாதிக்கப்படும் குழந்தையின் புறத்திலிருந்து அந்தப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் பிரச்சினையின் வீரியத்தையும் கடத்தியது. வன்முறை தீர்வல்ல என்பதை நிமிஷா சஜயன் கதாபாத்திரம் அழுத்தமாக வலியுறுத்தியது.

ஆனால், இதே கதைக்களத்தைக் கொண்ட ‘மகாராஜா’ பாதிக்கப்பட்ட மாணவியை வெறும் கருவியாக்கி, அதன் வழியே இரு ஆண்களின் பழிவாங்கல் கதையை அதீத வன்முறையுடன் காட்சிப்படுத்தியுள்ளது. ‘சென்சிட்டிவான’ விஷயத்தை வன்முறை கொண்டு பூசி மழுங்கடிக்க வேண்டுமா என்ற விமர்சனங்கள் எழுகின்றன. எடுத்துக்கொண்ட பிரச்சினையை அழுத்தமாக பேசாமல் அதன் வீரியத்தை மறக்கடிக்கும் வன்முறை எல்லை மீறுவதை சமீபத்திய படங்களில் பார்க்க முடிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் உள்ளிட்ட விஷயங்களை பேசியது என்றாலும், அதையெல்லாம் தாண்டி படத்தில் வெடித்த தோட்டாக்கள் எண்ணிக்கை மிக அதிகம். ரத்தம் சொட்டச் சொட்ட, தலையை வெட்டி கையோடு எடுத்துச்செல்லும் ‘ரத்னம்’ அபத்தம். விஷால் - ஹரியின் காம்போவில் உருவான இப்படம், லாரியிலிருந்து கழன்ற டையராக எந்த வித நோக்கமும் இல்லாமல் ரத்தம், கத்தி, கொலை, சத்தம் என வெறும் வன்முறை. தவிர்த்து, ‘மிஷன் சாப்டர் 1’, ‘சைரன்’, ‘ஜோஷ்வா’,‘கருடன்’, ‘மகாராஜா’ என தமிழ் சினிமாவின் முதல் 6 மாதத்தில் ரத்தம் தெறிக்கிறது.

ஆறுதல் அளித்த படங்கள்: இந்த ஆண்டில் அப்படியான எந்த படமும் சிக்கவில்லை என்றாலும், தேடித்தேடிக் களைந்தால் சில படங்கள் தென்படுகின்றன. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அதன் கிராஃபிக்ஸால் ரசிகர்களை ஈர்த்தது. பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ கிரிக்கெட்டின் வழியே ஊர் - காலனி ஏற்றத்தாழ்வுகளையும், ஒற்றுமையின் தேவையையும் உணர்த்தியது. புறா பந்தயத்தை பேசியது ‘பைரி’.

மணிகண்டனின் ‘லவ்வர்’ டாக்ஸிக் காதலின் விளைவுகளைப் பேசியதுடன் திரைக்கதையாலும் கவனிக்கப்பட்டது. ஊர்வசியின் ‘J.பேபி’ எமோஷனலான ட்ராவல் குறைகளைத் தாண்டி நிறைவைத் தந்தது. ‘குரங்கு பெடல்’ குழந்தைகளுக்கான படமாக ஓடிடி வெளியிட்டுக்குப் பின் பேசப்படுகிறது. தவிர்த்து, ‘ஸ்டார்’, ‘எலக்‌ஷன்’, ‘பிடி சார்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றன. ‘கருடன்’, ‘மகாராஜா’ வெகுஜன ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ரூ.100 கோடியை வசூலித்தது. இப்படம் ஜனவரியில் வெளியானது. இதையடுத்து அடுத்த ரூ.100 கோடியை தமிழ் சினிமா பார்ப்பதற்கு 5 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. கோடை விடுமுறை, ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை என மே மாதம் வெளியான சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ரூ.100 கோடியை வசூலித்தது. சிவகார்த்தியகேயனின் ‘அயலான்’ ரூ.90 கோடியையும், சூரியின் ‘கருடன்’ ரூ.50 கோடியையும் வசூலித்துள்ளது. விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ரூ.100 கோடியை நோக்கி நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 6 மாதங்கள்: விக்ரம் - பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’, கமல் - ஷங்கரின் ‘இந்தியன் 2’, தனுஷின் ‘ராயன்’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, விஜய்யின் ‘தி கோட்’, ரஜினியின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சூர்யாவின் ‘கங்குவா’, பாலாவின் ‘வணங்கான்’, வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ ஆகிய படங்கள் சோர்வு கண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x