Published : 16 Jun 2024 01:13 PM
Last Updated : 16 Jun 2024 01:13 PM
‘அப்பா...’ ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பின்னால் இருக்கும் அற்புத வார்த்தை. அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வார்த்தைகளாக வெளிப்படும் பாச உணர்வுகள், அப்பா - பிள்ளை உறவில் அழகான மவுனமாக புதைந்து கிடக்கும். பிள்ளைகளிடம் தந்தை காட்டும் கண்டிப்புக்கு பின்னால் கூட அபரிமிதமான அன்பு மறைந்திருக்கும். பதின்பருவத்தில் கசக்கும் அப்பாவின் கண்டிப்புகள் அனைத்தும் பக்குவம் வந்தபிறகு பொக்கிஷங்களாக தெரியும்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த ‘தந்தை’ என்ற உறவை மிக அழகாக காட்டிய ஏராளமான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளமாக வெளியாகியுள்ளன. அவற்றில் சில படங்களும், அதன் கதாபாத்திரங்களும் கொண்டாடப்படாமலே போயுள்ளன. எனினும் இன்றுவரை ‘அப்பா’ என்ற உறவை அழுத்தமாக காட்டி ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த முக்கியமான பத்து படங்கள் / கதாபாத்திரங்களை பற்றி இங்கே பார்க்கலாம்:
1) தவமாய் தவமிருந்து (2005) - முத்தையா: தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த பத்து படங்களை வரிசைப்படுத்தினால் அதில் சேரன் இயக்கிய இந்த படம் கட்டாயம் இடம்பெறும். ஒரு தந்தை தன் குடும்பத்தின், பிள்ளைகளின் வளர்ச்சிக்காக என்னவிதமாக தியாகங்களை செய்கிறார் என்பதை எந்தவித மிகைப்படுத்தலும் இன்றி மிக எதார்த்தமாக பதிவு செய்த படைப்பு.
ஆனால், ஓர் உலக சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத இப்படம் வெளியான காலத்தில் கொண்டாடப்படவே இல்லை என்பது சோகம். 70களின் காலகட்டத்தில் பிரிண்டிங் பிரஸ் வைத்து மகன்களை வளர்க்க அரும்பாடு படும் முத்தையாவாக நடித்த ராஜ்கிரணுடன், பார்ப்பவர்கள் தங்கள் தந்தையுடன் ஒப்பிட்டு நெகிழாமல் இருக்கவே முடியாது. உதாரணமாக தீபாவளிக்கு முந்தைய நாள் பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்க அச்சகத்தில் இரவு முழுக்க உழைக்கும் காட்சி யாரையும் கலங்கடித்து விடும்.
2) மகாநதி (1994) - கிருஷ்ணா: எத்தனை ஆண்டுகாலம் ஆனால் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்கள் ஒருவகை. ஆனால் ஒருமுறை பார்த்தபிறகு மீண்டும் எந்தசூழலிலும் பார்த்துவிடவே கூடாது என்று எண்ணவைக்கும் படங்கள் வேறுவகை. அதில் ‘மகாநதி’ இரண்டாம் வகை. இதன் அர்த்தம் மோசமான படம் என்பதல்ல. படத்தில் கிருஷ்ணாவாக நடித்திருக்கும் கமல்ஹாசன் அனுபவிக்கும் துயரங்கள் எந்த கட்டத்திலும் நமக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற பயமும், மீண்டும் அழுதுவிடக் கூடாது என்கிற எண்ணமும் தான் அதற்கு காரணம்.
ஓர் அழகான குருவிக் கூடு போல இருக்கும் குடும்பம் எதிர்பாரா திசையில் இருந்து வரும் ஒரு புயலில் சிக்கி சின்னாபின்னமாவதை மீண்டும் பார்க்க யாருக்கு தான் துணிச்சல் இருக்கிறது. குறிப்பாக பாலியல் தொழிலாளிகளின் கால்களில் விழுந்து கிருஷ்ணா தன் மகளை மீட்டு வரும் காட்சி இதயத்தை பிடுங்கி வெளியே எறிந்துவிடும்.
3) வாரணம் ஆயிரம் (2008) - கிருஷ்ணன்: தனக்காக அனைத்தையும் செய்து தன்னை ஆளாக்கிய தன் தந்தைக்காக இயக்குநர் கவுதம் மேனம் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் ‘வாரணம் ஆயிரம்’. மேல்நடுத்த வர்க்க இளைஞனான நாயகனின் காதல், வலி, வாழ்க்கை போராட்டம் என வாழ்வின் அனைத்து கட்டத்திலும் அவன் தந்தை கிருஷ்ணன் அவனுக்கு உறுதுணையாக நின்றார் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லிய திரைப்படம்.
காதலியை பார்க்க மகனை அமெரிக்கா அனுப்பி வைப்பது போன்ற விஷயங்கள் பின்னாட்களில் சமூக வலைதளங்களில் மீம் கன்டென்ட்களாக பகிரப்பட்டாலும், தந்தை மகன் இடையிலான உறவை மிக அழகான காட்டிய படம் ‘வாரணம் ஆயிரம்’ என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
4) அபியும் நானும் (2008) - ரகுராமன்: தந்தை மகன் உறவை பேச பல படங்கள் இருந்தாலும், தந்தை மகள் உறவை பேசியதில் முக்கியமான படம் ‘அபியும் நானும்’. இந்த பட அறிவிப்பு வந்தபோது ‘கில்லி’யில் த்ரிஷாவை ‘செல்ல’ டார்ச்சர் செய்த பிரகாஷ்ராஜ் இதில் அவருக்கு அப்பாவா என்று பலரும் சந்தேகத்துடன் தான் பார்த்தார்கள். ஆனால் படம் பார்க்கும்போதே அதையெல்லம் மறக்கடிக்கும் வகையில் தந்தை மகளாகவே வாழ்ந்திருப்பார்கள் இருவரும்.
மகளை பள்ளியில் சேர்ப்பது, படிக்கச் சென்ற மகள் சீக்கிய காதலருடன் திரும்பி வருவது என படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்தாலும், இறுதி சில நிமிடங்களில் நம்மை கண்கலங்கி நெகிழச் செய்துவிடுவார் ராதா மோகன்.
5) பேரன்பு (2018) - அமுதவன்: ஒரு தந்தைக்கும், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைக்கும் இடையிலான உறவைப் பேசுகிறது ராம் இயக்கிய ‘பேரன்பு’. ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை அதுவும், ஒரு பெண் குழந்தையை வளர்க்கும்போது ஒரு அப்பா எதிர்கொள்ளும் சிக்கல்களை அழுத்தமாக காட்டிய இப்படத்தில் அமுதவனாக நடிப்பில் மிரட்டியிருப்பார் மம்முட்டி.
6) என்னை அறிந்தால் (2015) - சத்யதேவ்: முதலில் இது ஆக்ஷன் த்ரில்லர் வகையிலான படம்தான். ஆனால் தான் காதலித்த பெண்ணின் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்க்கும் ஒரு தந்தைக்கும் அந்த பெண் குழந்தைக்கும் இடையிலான உறவு அழகான முறையில் படத்தின் இரண்டாம் பாதி காட்சிப்படுத்தியிருக்கும். மகளின் நிம்மதியான வாழ்வை உறுதி செய்ய தன்னுடைய போலீஸ் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டும் நாடு முழுக்க சுற்றித் திரிவது, மகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வது என அஜித் சத்யதேவ் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். மகள்களை நேசிக்கும் தந்தைகளில் நீண்டநாள் ரிங்டோனாக இதில் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
7) பாபநாசம் (2015) - சுயம்புலிங்கம்: இதுவுமே ஒரு க்ரைம் த்ரில்லர் பாணி திரைப்படம்தான் என்றாலும், இப்படத்தின் அடிநாதம் தன் குடும்பம் குற்றவாளிக் கூண்டில் ஏறுவதை தடுக்க போராடும் ஒரு தந்தையை பற்றியது. ஏற்கெனவே மலையாளத்தில் ஹிட்டடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக் ஆக தமிழில் உருவான இப்படத்தில் சுயம்புலிங்கமாக கமல் நடித்திருப்பார். ஆனால் மலையாளத்தில் நடித்த மோகன்லால் கதாபாத்திரத்திலிருந்து சில நுணுக்கமான வித்தியாசங்களை கமலிடம் பார்க்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கொலையை செய்துவிடும் மகளை போலீஸ் வளையத்திலிருந்து காப்பாற்ற சுயம்புலிங்கம் போராடும் காட்சிகள் எப்போதும் மறக்கமுடியாதவை.
8) தெய்வ திருமகள் (2011) - கிருஷ்ணா: இது தந்தை - மகள் உறவைப் பற்றி பேசிய மற்றொரு முக்கியமான திரைப்படம் ஆகும். மாற்றுத் திறனாளியான தந்தை கிருஷ்ணாவுக்கும், குழந்தையாகவும், தாயாகவும் அவனை பார்த்துக் கொள்ளும் நிலாவுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை நெகிழ்ச்சியாக பதிவு செய்திருப்பார் இயக்குநர் விஜய். படத்தின் தொடக்கம் முதல் கதாபாத்திரங்களையும் அவற்றுக்கான பின்னணியையும் பார்ப்பவர்களின் மனதில் ஆழமான பதிய வைத்து கிளைமாக்ஸில் உச்சகட்டமாக பொங்கி அழவைத்திருப்பார். படத்தில் கிருஷ்ணாவாக வரும் விக்ரமுக்கும், நிலாவாக வரும் சாரா அர்ஜுனுக்கும் இடையிலான கியூட் தருணங்கள் ஏராளம் உண்டு.
9) அசுரன் (2019) - சிதம்பரம்: சமூகத்தில் படிந்திருக்கும் சாதி என்னும் அழுக்கில் சிக்கி சீரழியும் நிலையில் இருக்கும் தன் குடும்பத்தை காக்க ஓடிக் கொண்டே இருக்கும் சிதம்பரம் என்னும் தந்தையின் கதை. சாதி வன்மத்துக்கு மூத்த மகனை பலிகொடுத்துவிட்டு, மற்றொரு மகனை காப்பாற்ற துடிக்கும் மனிதனாக தனுஷ் ’தேசிய விருது’ நடிப்பை கொடுத்திருப்பார். மகனின் தலையில்லாத உடலைக் கண்டு வெடித்து அழுவது, அதே நிலை தன் இரண்டவது மகனுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக வீறுகொண்டு எழுவது, இறுதியில் கல்வியின் அவசியத்தை மகனுக்கு உணர்த்துவது என தனுஷின் பரிணாமங்கள் ஆச்சர்யபடுத்தின.
10) அப்பா (2016) - தயாளன்: அப்பா மகனுக்கு தரும் அறிவுரைகள் தொடர்பாக இப்போதும் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களாக வலம் வந்துகொண்டிருக்கும் திரைப்படம். தன் மகனை சிறந்த முறையில் வளர்க்க போராடும் தந்தையாக சமுத்திரக்கனி. இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் பல விஷயங்கள் மிகையாக தோன்றினாலும் பிள்ளைகள் எதிர்பார்ப்பது இப்படி ஒரு அப்பாவைத்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT