Published : 11 May 2018 09:00 PM
Last Updated : 11 May 2018 09:00 PM
‘இரும்புத்திரை’, 2018-ம் ஆண்டின் ‘தனி ஒருவன்’ எனப் பாராட்டியுள்ளார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
விஷால் நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுனும், ஹீரோயினாக சமந்தாவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
படம் பார்த்த எல்லாருமே, படத்தைப் பாராட்டி வருகின்றனர். ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநரான ஸ்ரீகணேஷ், “அற்புதமான படம் ‘இரும்புத்திரை’. 2018-ம் ஆண்டின் ‘தனி ஒருவன்’. மித்ரன், நீங்கள் மிகச்சிறந்த கதைசொல்லி மற்றும் இயக்குநர். உங்களுடைய ஆராய்ச்சிகளுக்கும், கடின உழைப்புக்கும் தலை வணங்குகிறேன்” என முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதைப் பார்த்து அவருக்கு போன் போட்டால், “படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ‘தனி ஒருவன்’ அளவுக்கு ஒர்க் பண்ணியிருக்கிறார்களே என ஆச்சரியமாக இருந்தது. ‘தனி ஒருவன்’, மோகன் ராஜா சாருக்கு பத்தாவது படம். ஆனால், முதல் படத்திலேயே அந்த அளவுக்குப் பண்ணியிருக்கிறார்களே என வியப்பாக இருந்தது.
கதையாக இந்தப் படம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. அருமையாக எழுதியிருக்கிறார். ஓப்பனிங், அதற்கான லீடு என எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஒரு காட்சி கூட படத்தில் தேவையில்லாமல் இடம்பெறவில்லை. முதல் பாதியில் எதார்த்தமாக அமைந்த விஷயங்களைக் கூட, இரண்டாம் பாதியில் சரியாகப் பயன்படுத்தியிருந்தனர்.
ஹீரோவுக்கான மொமண்ட்ஸ் பிடிப்பதை, அவ்வளவு அருமையாகப் பிடித்திருந்தார். ரொம்ப நாள் கழித்து ஹீரோவுக்கும் கைதட்டல், வில்லனுக்கும் கைதட்டல், அவ்வளவு ஏன்... ஹீரோயினுக்கும் கைதட்டல் கிடைத்த படம் இதுதான். சமந்தா வாய்க்குள் ஜிபிஎஸ் ட்ராக்கரை வைத்திருந்த காட்சி, அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது. அடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் சார் லெவலுக்கு மித்ரனும் வருவார் என நம்புகிறேன்.
இசையைப் பொறுத்தவரை, படம் முழுக்க டெம்போவை அருமையாகக் கையாண்டிருந்தார் யுவன் சார். குறிப்பாக, வில்லன் தீம். சமீபத்தில் ரெபரன்ஸுக்காக ‘நான் மகான் அல்ல’ பார்த்தேன். படத்திற்கான முழு டெம்போவையும் தன்னுடைய இசையில் வைத்திருந்தார் அவர். அந்த அளவுக்கு அவர் இசையமைக்கவும் ஒரு ஸ்பேஸ் வேண்டுமல்லவா? நீண்ட நாட்களுக்கு அப்படிப்பட்ட படமாக ‘இரும்புத்திரை’ அமைந்திருக்கிறது” என்று பாராட்டினார் ஸ்ரீகணேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT