Published : 04 Jun 2024 05:58 AM
Last Updated : 04 Jun 2024 05:58 AM

காடுகளில் உருவான முதல் தமிழ் திரைப்படம் ‘வனராஜ கார்ஸன்’

அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ரைஸ் பர்ரோஸ் (Edgar Rice Burroughs) உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் டார்ஜான். இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் ‘டார்ஜான் ஆஃப் தி ஏப்ஸ்’ என்ற மவுனப் படம், 1918-ம் ஆண்டு உருவானது. இதன் பின்னணியில், 1926-ல் இந்தியில் உருவான ‘கிங் ஆப் பாரஸ்ட்’ (King of Forest) என்ற மவுனப் படம்தான், இந்த ஜானரில் உருவான முதல் இந்திய படம். பிறகு ஜங்கிள் குயின் (1936), ஜங்கிள் கிங் (1939), ஜங்கிள் பிரின்சஸ் (1942) என படங்கள் தொடர்ந்தன.

ஆனால், தமிழில் வனத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவான முதல் படம், ‘வனராஜ கார்ஸன்’ (Vanaraja Karzan). இந்தியில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த ஹோமி வாடியாவும் நாரி கடியாலியும் இணைந்து இயக்கிய படம் இது. வாடியா மூவிடோன் நிறுவனம் மெட்ராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேசனுடன் இணைந்து தயாரித்தது. ஜே.பி.ஹெச்.வாடியா எழுதிய கதைக்கு எஸ்.ஆர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் திரைக்கதை எழுதினார். ‘யானை’ அனந்தராம ஐயர், வைத்தியநாத ஐயர் இசை அமைத்தனர்.

இந்தியில் சாகச நாயகனாகப் புகழ் பெற்றிருந்த ஜான் கவாஸ் (John Cawas) இதில் கார்ஸனாக நடித்தார். நாயகியாக ‘மெட்ராஸ் மெயில்’, ‘பாலயோகினி’ படங்களில் அப்போது நடித்திருந்த கே.ஆர்.செல்லம் நடித்தார்.

சிறுவயது முதல் காட்டில் வளரும் நாயகன், வில்லனின் மகளான நாயகியைக் காட்டுக்குள் தூக்கிச் சென்றுவிடுகிறான். பயந்து நடுங்கும் நாயகியை அவனின் நல்ல குணங்கள் மாற்றுகின்றன. இருவரும் காதல் கொள்கிறார்கள். காட்டுக்குள் வரும் வில்லன், நாயகனின் கழுத்தில் தொங்கும் தாயத்தில் ‘அமிர்தரசம்’ பற்றிய ரகசியம் இருப்பதை அறிந்து அவனை கொன்றுவிட்டு மகளை மீட்க நினைக்கிறான். அது நடந்ததா இல்லையா என்று கதை செல்லும். சாகசங்கள் நிறைந்த இந்தப் படம் அன்றைய பார்வையாளர்களை அதிகமாகத் திரையரங்குகளுக்கு இழுத்துவந்தது.

நாயகியாக நடித்த கே.ஆர்.செல்லம் இந்தப் படத்தில் அதிக கவர்ச்சியாக நடித்து பரபரப்பை உண்டாக்கினார். தமிழ் சினிமாவில் முதன் முறையாக இடம்பெற்ற அந்த கவர்ச்சிக் காட்சிகளை அப்போது பத்திரிகைகள் கண்டித்தன. ‘தமிழ் நடிகையான செல்லம் இப்படி நடிக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பின. செல்லம் அளித்த பேட்டியில், “என்னை இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க வைப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஒப்பந்தம் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்றார்.

தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை இந்தியில் ‘ஜங்கிள் கிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதிலும் ஜான் கவாஸ் நாயகனாக நடித்தார். டார்ஜான் கதாபாத்திரத்தைக் கொண்டு தமிழில் உருவான முதல் படமான இது, 1938-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x