Published : 28 May 2024 02:37 PM
Last Updated : 28 May 2024 02:37 PM

“எனக்கு ‘ஏடிஹெச்டி’ குறைபாடு உள்ளது” - ஃபஹத் ஃபாசில் பகிர்வு

சென்னை: “ஏடிஹெச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். 41 வயதில் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டேன். அவர் சிறுவயதில் இந்நோயை கண்டறிந்தால் உடனே குணப்படுத்திவிடலாம் என்றார்” என நடிகர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்துக்கு வருகை புரிந்தார் நடிகர் ஃபஹத் பாசில். அங்கு பேசிய அவர், “எனக்கு மருத்துவ ரீதியாக ஏடிஹெச்டி என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. அது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், அதற்கென்று தனி குணாதிசயங்கள் உண்டு.

நான் மருத்துவரிடம் 41 வயதில் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர், சிறுவயதாக இருந்தால் இந்த நோயை உடனே குணப்படுத்தி விடலாம் என்றார்” எனப் பேசினார். ஃபஹத்தின் இந்த பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏடிஹெச்டி (ADHD): ‘Attention-deficit/hyperactivity disorder’ என்பது மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பியல் குறைபாடு என மருத்துவர்களால் விளக்கப்படுகிறது. கவனச்சிதறல் குறைபாடு என்பது இதன் எளிய விளக்கம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கவனச் சிதறல் காரணமாக குறிப்பிட்ட வேலையை அதற்கு உண்டான காலத்துக்குள் முடிக்க முடியாமல் தவிப்பது உண்டு. ஹைபர் ஆக்டிவாக இருப்பது, கவனச்சிதறல், உணர்ச்சிகளை அடக்க முடியாமை, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, அதிகமாக பேசிக்கொண்டேயிருப்பது உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன. நடிகர் ஃபஹத் ஃபாசில் தனக்கு இந்த நோய் இருப்பதாக தெரிவித்திருப்பதன் மூலம் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x